வலுப்பெறுகிறது புயல் சின்னம்: மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்.!
மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் - மீன்வளத்துறை அறிவுறுத்தல்


வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில்(நவ. 26) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதன் பிறகு, அதற்கடுத்த இரு தினங்களில் வடமேற்கு திசையில் தமிழகம்- இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.
இதன் காரணமாக இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை டெல்டா மாவட்டங்களில் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும்,
விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த நிலையில், நவ. 25 முதல் 29 வரை தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக, கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுவதால் அடுத்த 5 நள்களுக்கு, நவ. 29 வரை மீன்பிடிக்கச் செல்லவேண்டாமென்று மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகக் கடல் பகுதிகளில், தென் தமிழக கடலோரப் பகுதிகள், வட தமிழக கடலோரப் பகுதிகள், குமரி கடல் பகுதி, மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் நவ. 29 வரை, காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல, தென் மேற்கு வங்கக்கடல் - தென் கிழக்கு வங்கடலில் அதனையொட்டிய பகுதிகள், தென் கேரள கடலோரப்பகுதிகள், தெற்கு வங்கக் கடலில் பெரும்பாலான பகுதிகள் - அந்தமான் கடலில் அதனையொட்டிய பகுதிகள், தெற்கு ஆந்திர பிரதேச கடலோரப் பகுதிகள், வடக்கு ஆந்திர பிரதேச கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் வரும் நாள்களில் அதிகரித்து அதிகபட்சமாக மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வானிலை மையத்தின் எச்சரிக்கையை அடுத்து, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட விசைப்படகு மீனவர்கள், மறுஅறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாமென மீன் வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் இன்று கரை திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புயல் சின்னம் தமிழகக் கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், தூத்துக்குடி, பாம்பன், நாகப்பட்டினம், புதுச்சேரி, கடலூர், காட்டுப்பள்ளி, எண்ணூர், சென்னை துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...