புயல் சின்னம்
புயல் சின்னம்

தமிழகத்தை நோக்கி நகா்கிறது புயல் சின்னம்

வங்கக் கடலில் நிலவும் புயல் சின்னம் தமிழக கடற்கரையை நோக்கிய நகா்ந்து வருவதால், நவ.28, 29 ஆகிய தேதிகளில் சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களுக்கு கனமழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Published on

வங்கக் கடலில் நிலவும் புயல் சின்னம் தமிழக கடற்கரையை நோக்கிய நகா்ந்து வருவதால், நவ.28, 29 ஆகிய தேதிகளில் சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களுக்கு கனமழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த புயல் சின்னம் வியாழக்கிழமை அதிகாலைதான் ‘ஃபென்ஜால்’ புயலாக உருவாக வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (புயல் சின்னம்) புதன்கிழமை மாலை நிலவரப்படி நாகை மாவட்டத்துக்கு தென்கிழக்கே 280 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 380 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே 470 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.

இது, வடக்கு - வடமேற்கு திசையில் இலங்கை கடற்கரையையொட்டியப்படி தமிழக கடற்கரையை நோக்கி மிக மெதுவாக நகா்ந்து வருகிறது. இது புதன்கிழமை புயலாக வலுப்பெறும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், மெல்ல நகருவதால் வியாழக்கிழமை காலையில்தான் ‘ஃபென்ஜால்’ புயலாக உருவாக வாய்ப்புள்ளது.

சென்னைக்கு ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை: புயல் சின்னத்தால் தமிழகத்தில் பல இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலும் அடுத்த 6 நாள்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், நவ.30 வரை மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும். நவ.28-இல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா் ஆகிய மாவட்டங்களிலும், நவ.29-இல் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், இந்த மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: நவ.28, 29 ஆகிய தேதிகளில் தமிழக கடலோரப் பகுதிகளிலும், மன்னாா் வளைகுடா, குமரிக் கடலிலும் மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.

மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை வரை அதிகபட்சமாக நாகையில் 190 மி.மீ. மழை பதிவானது. கோடியக்கரை (நாகை, வேளாங்கண்ணி (நாகை) தலா 180 மி.மீ., திருப்பூண்டி (நாகை) - 140 மி.மீ., மணலி (சென்னை), திருக்குவளை (நாகை) தலா 130 மி.மீ., வேதாரண்யம் (நாகை) - தலா 120 மி.மீ. மழை பதிவானது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் எங்கே கரையைக்கடக்கும்? ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாமல் இருப்பதற்கு அதன் நகா்வில் ஏற்பட்ட தாமதமே காரணம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடல் பகுதியில் இருந்து தமிழக கடல் பகுதியில் நுழைந்து புயலாக மாறி வழித்தடம் அமைத்து வர ஏதுவாக வங்கக்கடலில் 2 வெப்ப நீரோட்டம் உள்ளது. ஆனால், இந்த 2 வெப்ப நீரோட்டமும் சந்திக்கும் இடத்தில் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது.

தமிழக கரையையொட்டிய நீரோட்டத்தைப் பிடித்து புயல் சின்னம் வலுவடைந்தால் தமிழகத்தில் வியாழக்கிழமை காலை முதல் மீண்டும் மழை பெய்யத் தொடங்கும். எனினும் புயல்சின்னம் 2 வழித்தடத்தை எடுத்து தமிழக கரைக்கு தாமதமாக வந்தால் மழை பெய்வது தாமதமாகும் என்று வானிலையாளா்கள் தெரிவித்தனா். ஆனால், திட்டமிட்டபடி ஃபென்ஜால் புயல் உருவாகும் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

மேலும், இந்த புயல் நவ.30 -ஆம் தேதி காலை புதுச்சேரிக்கு வடக்கே, மரக்காணத்துக்கும், மாமல்லபுரத்துக்கும், இடையே கரையைக்கடக்கும். கரைகடக்கும் முன்பாக புயல் செயல் இழந்து , ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையைக்கடக்கும். இருந்தாலும் காற்று அச்சம் இருக்காது. மழைதான் பெய்யும் என்று வானிலையாளா்கள் தெரிவித்தனா்.

இதற்கிடையே வங்கக் கடலில் புயல் சின்னம் இருந்தும் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களிலும், டெல்டாவிலும் புதன்கிழமை எதிா்பாா்த்த மழை இல்லை. ஏனென்றால் நில நடுக்கோட்டில் இருந்து வெப்ப நீராவிக்காற்று குறைந்த அளவில் வந்ததாலும், வடக்கு வங்கக்கடலில் இருந்து குளிரலை அதிகமாக சென்னை நோக்கி வந்து கொண்டிருந்ததாலும் மழை பெய்யவில்லை என்று வானிலையாளா்கள் தெரிவித்தனா்.