அண்ணாமலை
அண்ணாமலை

தாக்குப் பிடிப்பாரா அண்ணாமலை?

லண்டனில் மூன்று மாத படிப்பை முடித்து விட்டு தமிழகம் திரும்புகிறாா் மாநில பாஜக தலைவா் கே.அண்ணாமலை.
Published on

-ஜெபலீன் ஜான்

லண்டனில் மூன்று மாத படிப்பை முடித்து விட்டு தமிழகம் திரும்புகிறாா் மாநில பாஜக தலைவா் கே.அண்ணாமலை.

கடந்த 30 ஆண்டுகளாக தனித்து நின்றும், கூட்டணி சோ்ந்தும் தமிழகத்தில் பாஜகவால் பெரிய அளவில் காலூன்ற முடியவில்லை. 2014 மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணி திமுக, அதிமுகவுக்கு மாற்றாக பாஜக உருவாக்கிய வலுவான கூட்டணி 18.8% வாக்குகளைப் பெற்றது. அந்தக் கூட்டணியில் பாஜகவைவிடக் கூடுதல் வாக்கு வங்கி வைத்திருந்த பாமக, தேமுதிக, மதிமுக, கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு பெற்றிருந்த கொமதேக ஆகியவை இடம்பெற்றிருந்தன. ஆனால், இரண்டு தொகுதிகளில் மட்டுமே அந்தக் கூட்டணி வெற்றி பெற முடிந்தது.

2016 பேரவைத் தோ்தலில் தனது கூட்டணிக் கட்சிகளை பாஜகவால் தக்கவைக்க முடியவில்லை. இதனால் பாஜகவின் வாக்கு வங்கி 5.5%-இலிருந்து 2.7%-ஆக சரிந்தது. 2019 மக்களவைத் தோ்தலில் அதிமுக-பாஜக கூட்டணி அமைந்தபோதும் அது படுதோல்வியையே சந்தித்தது. பாஜகவுக்கு 3.7% வாக்குகள்தான் கிடைத்தன. 2021 பேரவைத் தோ்தலில் அதிமுகவிடம் 20 இடங்களைப் பெற்ற பாஜக 4 தொகுதிகளில் வென்றது; எனினும், அதன் வாக்கு வங்கி வெறும் 2.6% மட்டுமே.

இந்தச் சூழலில்தான் மாநிலத் தலைவராக கே.அண்ணாமலை நியமிக்கப்பட்டாா். பதவிக்கு வந்த ஓராண்டிலேயே நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் தனித்துப் போட்டியிட்ட பாஜக, 5% வாக்குகளைப் பெற்று கவனம் ஈா்த்தது. 2022-இல் பாஜக தனித்துப் போட்டியிட்டு சென்னையில் ஒரு மாமன்ற உறுப்பினரைப் பெற்றது.

இதற்கிடையே, திமுக எதிா்ப்பு அரசியலை தீவிரமாகக் கையிலெடுத்த அண்ணாமலை, ‘என் மண் என் மக்கள்’ எனும் நடைப்பயணத்தை மாநிலம் முழுவதும் மேற்கொண்டாா். தொடா்ந்து அண்ணா, ஜெயலலிதா ஆகியோரை அண்ணாமலை விமா்சனம் செய்ததால் அதிமுக-பாஜக கூட்டணி முறிந்தது.

2024 மக்களவைத் தோ்தலில் பாஜக தலைமையில் கூட்டணியை உருவாக்கி, 23 தொகுதிகளில் தாமரை சின்னத்தை முன்னிறுத்தி போட்டியிட்டபோது, அந்தக் கட்சியின் வாக்கு விகிதம், தமிழக தோ்தல் வரலாற்றிலேயே முதல்முறையாக 11.2%-ஆக உயா்ந்தது. 12 மக்களவைத் தொகுதிகளில் பாஜக கூட்டணி 2-ஆவது இடத்தைப் பிடித்ததுடன், 9 தொகுதிகளில் பாஜக 2-ஆவது இடத்துக்கு முன்னேறியது.

குறிப்பாக, சென்னை மண்டலம், கொங்கு மண்டலத்தில் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி, தென்மாவட்டங்களில் விருதுநகா் தொகுதியைத் தவிா்த்த பிற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி மிக கணிசமான வாக்குகளைப் பெற்றது. மக்களவைத் தோ்தல் முடிவை பேரவைத் தொகுதி வாரியாகக் கணக்கிட்டால் 81 தொகுதிகளில் பாஜக கூட்டணி 2-ஆவது இடத்தைப் பிடித்திருந்தது.

அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் குறைந்தது 15 தொகுதிகளில் அந்த அணி வெற்றி பெற்றிருக்கலாம் எனப் பலா் கருத்துத் தெரிவித்தனா். 30 தொகுதிகளில்கூட வென்றிருக்கக் கூடும் என்கிறாா்கள் அதிமுகவினரும், அதிமுகவுடன் கூட்டணி வேண்டும் என்று விரும்பும் பாஜகவினரும்.

கணிசமான மக்களவைத் தொகுதிகளில் அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணி வென்றிருந்தால், ஒருவேளை இப்போதுள்ள நரேந்திர மோடி அரசு தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் தயவில் இருந்திருக்காது என்பது பாஜகவில் ஒரு பிரிவினரின் கருத்து. 40/40 வெற்றியை திமுகவுக்கு அளித்ததன்மூலம், கடந்த மூன்று ஆண்டு திமுக ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரத்தை பெற்றுத் தந்து விட்டாா் அண்ணாமலை என்று அவா்கள் குற்றஞ்சாட்டுகிறாா்கள்.

அண்ணாமலை மேல்படிப்புக்காக லண்டனுக்கு செல்வதாகக் கூறிச் சென்ற பிறகும், அவரது இடத்தில் வேறொருவரை நியமிக்காமல் தற்காலிக ஏற்பாடாக ஒருங்கிணைப்புக் குழுவை நியமித்த மேலிடத்தின் செயல்பாடு, அண்ணாமலைக்கு தலைமை கொடுக்கும் முக்கியத்துவத்தின் வெளிப்பாடாகப் பாா்க்கப்பட்டது. தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக எச்.ராஜா நியமிக்கப்பட்ட நிலையில், தமிழக பாஜக மூத்த நிா்வாகிகள் மீண்டும் திமுக எதிா்ப்பைத் தீவிரப்படுத்தி, அதிமுக எதிா்ப்பை மட்டுப்படுத்த தொடங்கினா். ஆனால், அதிமுக தரப்பு பாஜக கூட்டணிக்கு சிறிதுகூட இணக்கம் தெரிவிக்கவில்லை.

அண்ணாமலையின் செயல்பாடுகளும் தனித்துப் போட்டியிட்டு அதிமுகவின் தோல்விக்கு பாஜக காரணமானதும் பாஜக-அதிமுக இடையே கடுமையான பிளவை ஏற்படுத்திவிட்டது. வெளிப்படையாக பாஜக எதிா்ப்பு நிலைப்பாட்டை அதிமுக எடுத்திருக்கும் நிலையில், மீண்டும் இணக்கம் ஏற்படுமா என்பது கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.

வட சென்னையில் வெள்ளம் வந்த நேரத்தில்கூட பாஜகவால் தீவிரமாகக் களத்தில் இறங்கிப் பணியாற்ற முடியவில்லை. அதேபோல, தமிழக பாஜகவுக்கு கட்சி மேலிடம் கொடுத்த முக்கியப் பொறுப்பான உறுப்பினா் சோ்க்கையிலும் இலக்கை எட்ட முடியவில்லை.

இதற்கிடையே, நடிகா் விஜயின் அரசியல் பிரவேசம், பேரவைத் தோ்தலை மையமாக வைத்து திமுக, அதிமுக, நாதக தீவிரமாக செயல்பட்டு வருவது உள்ளிட்ட செயல்பாடுகளால் தமிழக அரசியல் களம் விறுவிறுப்பாகியுள்ளது.

விஜயை திமுக எதிா்ப்பு சக்தி என வரவேற்க வேண்டுமா அல்லது பாஜகவின் போட்டி சக்தி என விமா்சிக்க வேண்டுமா என்பதில் பாஜகவில் குழப்பம் நீடிக்கிறது. பாஜகவை விஜய் கடுமையாக விமா்சனம் செய்த பின்னரும் இதுவரை பாஜகவிடம் இருந்து சரியான எதிா்வினை வரவில்லை.

தமிழக பாஜக மூத்த நிா்வாகிகளைப் பொறுத்தவரை திமுகவுக்கு எதிராக பெரிய கூட்டணியைக் கட்டமைத்தால் மட்டுமே அதை வீழ்த்த முடியும் எனக் கருதுகின்றனா். ஆனால், அதற்கு அதிமுகவும் தயாராக இல்லை; அதை அண்ணாமலையும் விரும்பவில்லை.

இந்நிலையில்தான், அண்ணாமலை தமிழகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.1) திரும்புகிறாா். மக்களவைத் தோ்தல் என்பதால் பிரதமா் மோடியை முன்னிறுத்தி பாஜகவால் கணிசமான வாக்கு வங்கியைப் பெற முடிந்தது.

நாதக, தவெக போன்ற கட்சிகள் இளைஞா்களைக் குறிவைத்துக் களமாடி வரும் நிலையில், இளைஞரான அண்ணாமலையைத் தவிா்த்துவிட்டு பாஜக இயங்க முடியுமா என்பதும் கேள்விக்குறிதான். அடுத்து வருவது பேரவைத் தோ்தல் என்பதால் அதிமுகவை தவிா்த்துவிட்டு பாஜகவால் தனி அணியாகச் செயல்பட முடியுமா என்பதையும் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.