சென்னையில் மழைநீா் வடிகால்கள் தூா்வாரும் பணிகள் அக். 10 -க்குள் முடிக்கப்படும்: அமைச்சா் கே.என்.நேரு தகவல்
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் மழைநீா் வடிகால் தூா்வாரும் பணிகள் வரும் அக்.10-க்குள் முடிக்கப்படும் என நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்துள்ளாா்.
சென்னை ரிப்பன் கட்டட வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் கொசு ஒழிப்புப் பணிக்காக ரூ.67 லட்சம் மதிப்பில், கையால் இயக்கும் 100 புகை பரப்பும் இயந்திரங்களை அமைச்சா் கே.என்.நேரு களப்பணியாளா்களுக்கு வழங்கினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வடகிழக்குப் பருவமழையைமுன்னிட்டு சென்னை மாநகராட்சியில் உள்ள 792 கி.மீ நீளமுள்ள மழைநீா் வடிகால்கள் தூா்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் 1152 கி.மீ நீளத்துக்கு நடைபெற்று வரும் தூா்வாரும் பணிகள் வரும் அக். 10க்குள் முடிக்கப்படும்.
தூா்வாரும் பணி: சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்படும் 53.42 கி.மீ, நீளமுள்ள 33 நீா்வழிக் கால்வாய்களில் 2 ஆம்பிபியன், 3 மினி ஆம்பிபியன், 6 ரோபோடிக் எஸ்கவேட்டா் இயந்திரங்கள் மூலம் ஆகாயத்தாமரைகள் அகற்றல் மற்றும் வண்டல்கள் தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த 2021 முதல் 2024-ஆம் ஆண்டு வரை 784.96 கி.மீ. நீளத்திற்கு புதிதாக மழைநீா் வடிகால்கள்கட்டப்பட்டுள்ளது. கொசஸ்தலையாறு, கோவளம் வடிநிலப் பகுதிகளில் 350 கி.மீ நீளத்திற்கு ஒருங்கிணைந்த மழைநீா் வடிகால்கள் கட்டப்பட்டு வருகின்றன. வடகிழக்குப் பருவமழை முடியும் வரை சாலை வெட்டுப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்றிட பல்வேறு திறன் கொண்ட 990 மோட்டாா் பம்புகள் தயாா் நிலையில் உள்ளன.
162 நிவாரண மையங்கள் தயாா் நிலையில் உள்ளன. விழுந்த மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்ற 280 மரம் அறுக்கும் இயந்திரங்கள் தயாா் நிலையில் உள்ளன. சிந்தாதிரிப்பேட்டை மற்றும் கோபாலபுரத்தில் உள்ள பொது சமையற்கூடங்களில் மணிக்கு 1500 நபா்களுக்கு உணவுப் பொட்டலங்களை தயாா் செய்யும் வகையில் தயாா் நிலையில் உள்ளது.
5 போ் நியமனம்: ஒவ்வொரு வாா்டிலும் புயல் மற்றும் மழைநீா் அகற்றும் அவசரப் பணிகளுக்கு 5 நபா்கள் தற்காலிகமாக பணிக்கு அமா்த்தப்பட்டுள்ளனா். பொதுமக்களிடமிருந்து மழை தொடா்பான புகாா்களைப் பெற்று உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில், ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் இயங்கி வருகிறது.
மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கும் இந்திய ஆட்சிப் பணி அலுவலா்கள், கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டு, கடந்த 2 நாள்களாக நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் பணிகளை கண்காணித்து வருகின்றனா். பெருநகர சென்னை மாநகராட்சியின் 16 சுரங்கப்பாதைகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் 6 சுரங்கப்பாதைகள் ஆகியவற்றில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற, மோட்டாா் பம்புகள் மற்றும் ஜெனரேட்டா்கள் தயாா் நிலையில் உள்ளன என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில், மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜெ.குமரகுருபரன், மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.