/

உதயநிதியை துணை முதல்வர் ஆக்கியதுதான் திமுகவின் சாதனை: இபிஎஸ்

உதயநிதியை துணை முதல்வர் ஆக்கியதுதான் திமுகவின் சாதனை என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

News image
எடப்பாடி பழனிசாமி.
Updated On :22 அக்டோபர் 2024, 10:29 am

DIN

உதயநிதியை துணை முதல்வர் ஆக்கியதுதான் திமுகவின் சாதனை என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தில் அதிமுகவின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, சேலத்தில் உள்ள மற்ற தொகுதிகளுக்கு முன்மாதிரி தொகுதியாக எடப்பாடி தொகுதி விளங்குகிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கலாம், ஆனால் வருகிற பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அடைவோம். உதயநிதி சொன்னதை போல் பைனல் விளையாட்டின் வெற்றி கோப்பையை அதிமுக பெறும். அதிமுக என்னும் வலிமையான இயக்கத்தை திமுக சிதைக்க நினைக்கிறது. திமுக பலமாக இல்லை. கூட்டணி கட்சிகள்தான் பலமாக உள்ளது. கூட்டணி கட்சிகள் கைவிட்டால் திமுக விழுந்து விடும்.

எந்த கட்சிக்கும் வெற்றி தோல்வி நிரந்தரம் கிடையாது. இன்று இருக்கும் முதல்வர், துணை முதல்வர் மக்களுக்கு எதையும் செய்யவில்லை. அதிமுகவின் பத்தாண்டு கால ஆட்சியில் நடந்த திட்டத்தைதான் திறந்து வைக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்து 41 மாதத்தில் எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. உதயநிதியை துணை முதல்வர் ஆக்கியதுதான் திமுகவின் சாதனை. தமிழகத்தில் வாரிசு அரசியல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கருணாநிதி குடும்பத்தில் இருந்து மட்டும் தான் அதிகாரத்திற்கு வர முடியும். ஸ்டாலின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக துணை முதல்வர் பதவி உதயநிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. 50 ஆண்டு காலமாக கட்சிக்கு உழைத்து படிப்படியாக இந்த பதவிக்கு வந்துள்ளேன். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சியை அகற்றி அதிமுக ஆட்சிக்கு வரும், அப்போது அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.