சென்னை: அரசுப் பேருந்தில் பயணி தாக்கியதில் நடத்துநர் உயிரிழப்பு!

சென்னை அரும்பாக்கத்தில் பயணியுடன் ஏற்பட்ட சண்டையில் கீழே விழுந்த அரசு பேருந்து நடத்துநர் ஜெகன்குமார் உயிரிழப்பு!
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

சென்னையில் பயணியுடன் ஏற்பட்ட சண்டையில், பேருந்திலிருந்து கீழே விழுந்த அரசுப் பேருந்து நடத்துநர் ஜெகன்குமார் உயிரிழந்தார்.

சென்னை சைதாப்பேட்டை லிட்டில் மவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன்குமார். இவர் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் அரசுப் பேருந்து நடத்துநராக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில், ஜெகன்குமார் நடத்துநராக பணியாற்றும் எம்.கே.பி நகர் முதல் கோயம்பேடு வரை செல்லும் பேருந்து(46ஜி வழித்தடம்) வியாழக்கிழமை(அக்.24) இரவு 8 மணியளவில் அரும்பாக்கம் - அண்ணா வளைவு அருகே சென்று கொண்டிருக்கும்போது, அங்கே இருந்த பேருந்து நிறுத்தத்திலிருந்து போதை ஆசாமி ஒருவர் முன்பக்க வாயிலாக பேருந்தினுள் ஏறியிருக்கிறார்.

அப்போது அவரிடம் டிக்கெட் எடுக்கச் சொல்லி நடத்துநர் ஜெகன்குமார் பணித்துள்ளார். ஆனால், அந்த பயணி டிக்கெட் எடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பயணிக்கும் நடத்துநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதில் ஆத்திரமடைந்த நடத்துநர் டிக்கெட் வழங்கும் சாதனத்தால் பயணியின் தலையில் அடித்துள்ளார். அதில் அந்த நபருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவரும் பதிலுக்கு நடத்துநரை தாக்கியுள்ளார்.நடத்துநரிடமிருந்த பயணச்சீட்டு ரசீது வழங்கும் சாதனத்தை பிடுங்கி நடத்துநரை பலமாக தாக்கியுள்ளார் அந்த நபர்.

அதில் நிலை தடுமாறிய நடத்துநர் பேருந்திலிருந்து வெளியே தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. அதில் நடத்துநர் ஜெகன்குமாருக்கு பலத்த காயம் உண்டானது.

இதனையடுத்து மயக்கமடைந்த ஜெகன்குமார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவரக்ள் தெரிவித்தனர்.

இதையடுத்து பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பேருந்துகளை நடுவழியில் நிறுத்திவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டானது. சம்பவ இடத்துக்கு சென்று அவர்களுடன் பேச்சுவார்ததை நடத்திய காவல்துறை அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததுடன் போக்குவரத்து நெரிசலையும் சரிசெய்துள்ளனர்.

நடத்துநரை தாக்கிய நபரை கொலை குற்றச்சாட்டின்கீழ் அமைந்தகரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த நபர் வேலுர் அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்த 53 வயதான கோவிந்தன் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com