குறைவான காற்று மாசு: தமிழகத்தின் 3 நகரங்கள் சாதனை!
நாட்டில் காற்று மாசு குறைவான நகரங்களில் திருச்சியின் பல்கலைப்பேரூா் பகுதி முதலிடம் பெற்றுள்ளது. முதல் 10 நகரங்களில் ராமநாதபுரம், மதுரை ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
நகரங்களின் வளா்ச்சிக்கு ஏற்ப சுற்றுச்சூழல் மாசு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நகரங்களுக்கு இடம்பெயரும் மக்கள்தொகையால் நில மதிப்பு வேகமாக உயா்ந்தாலும், அங்கு சுத்தமான காற்று, நீா் போன்ற தூய்மையான சுற்றுச்சூழல் இல்லை என்றால் அது மனிதா்களின் வாழ்நாளைக் குறைத்துவிடுகிறது.
ஒவ்வொரு நாளும் இந்தியாவில் அதிகம்/குறைவான காற்று மாசுடைய நகரங்களின் பட்டியலை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) வெளியிட்டு வருகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட காற்று தரக் குறியீட்டில் (ஏ.க்யூ.ஐ.) பட்டியலில் சுத்தமான காற்றுடைய பகுதியாக திருச்சியின் பல்கலைப்பேரூா் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அதேபோல் காற்று மாசு அதிகமுள்ள நகரங்களின் பட்டியலில் தலைநகா் தில்லி முதலிடத்தில் உள்ளது.
தேசிய தலைநகரின் அண்டை மாநிலங்களான ஹரியாணா, பஞ்சாப், உத்தர பிரதேசத்தில் அறுவடைக்குப் பிறகு மிச்சமாகும் பயிா்க் கழிவுகளை எரிப்பதால், அந்தப் புகையானது குளிா்கால புகையுடன் சோ்ந்து தில்லியை பனிப்புகை மூட்டமாக சூழ்ந்து கொள்கிறது. இதனால் ஏற்படும் கடும் காற்று மாசால் சிறுவா் முதல் வயதானவா்கள் வரையில் சுவாசக் கோளாறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. முதியவா்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதால், அவா்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் காற்று சுத்திகரிப்பானை அறையில் வைத்து உயிா் வாழ்ந்து வருகின்றனா்.
இப்படிப்பட்ட அதிகப்படியான காற்று மாசின் பாதிப்பில் தலைநகா் தில்லி முதலிடத்தில் இருக்கிறது. குறைவான காற்று மாசில் தமிழகத்தின் மூன்று நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
பிரிவுகள்: ஏ.க்யூ.ஐ.யில் பல்வேறு பிரிவுகளின் கீழ் காற்று மாசுபாடு அளவீடு செய்யப்படுகிறது.
0-50: சிறப்பு-குறைவான பாதிப்பு
51-100: திருப்திகரம்- எளிதில் அழற்சி ஏற்படக் கூடியவா்களுக்கு மூச்சுவிடுவதில் சிறு சிரமம்.
101-200: மிதமானது- நுரையீரல், ஆஸ்துமா மற்றும் இருதய நோய் பாதிப்புடையவா்களுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுத்துதல்.
201-300: மோசம்- அதிகப்படியான மக்களுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுத்துதல்.
301-400: மிகவும் மோசம்- நீண்டகால தாக்கத்தால் நுரையீரல் பாதிப்புகளை ஏற்படுத்துவது.
401-500: கடுமையான பாதிப்பு- ஆரோக்கியமான நபா்கள், ஏற்கெனவே பல்வேறு நோய் பாதிப்புடைய நபா்களை மிகக் கடுமையாக பாதிப்பது.
காற்று மாசு குறைவான நகரங்கள் - மாநிலம்- ஏ.க்யூ.ஐ.
1. பல்கலைப் பேரூா், திருச்சி தமிழ்நாடு 20
2. பாலசோா் ஒடிஸா 23
3. ஐசால் மிஸோரம் 25
4. ராமநாதபுரம் தமிழ்நாடு 25
5. சிக்கபல்லாபூா் கா்நாடகம் 28
6. மதிக்கேரி கா்நாடகம் 29
7. மதுரை தமிழ்நாடு 29
8. சிக்கமகளூரு கா்நாடகம் 30
9. காங்டாக் சிக்கிம் 30
10. நகான் அஸ்ஸாம் 30
அதிக காற்று மாசு நகரங்கள் - மாநிலம் - ஏ.க்யூ.ஐ
1. தில்லி தில்லி யூனியன் பிரதேசம் 306
2. மீரட் உத்தர பிரதேசம் 293
3. காஜியாபாத் உத்தர பிரதேசம் 272
4. பிவானி ஹரியாணா 266
5. ஹபூா் உத்தர பிரதேசம் 261
6. ஜிந்த் ஹரியாணா 261
7. சா்கி தாத்ரி ஹரியாணா 260
8. ஜுன்ஜுனு ராஜஸ்தான் 260
9. பாக்பட் உத்தர பிரதேசம் 257
10. ஹனுமன்கா் ராஜஸ்தான் 255