
தவெக மாநாட்டுக்குச் சென்றிருந்த அக்கட்சித் தொண்டர்களில் 6 பேர் பல்வேறு விபத்துகளில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை(அக். 27) நடைபெற்றது. விஜய் மாநாட்டில் பங்கேற்று பேசுவதை நேரில் கண்டுகளிக்க, லட்சக்கணக்கான தொண்டர்கள் ஒருபுறம் திரள, ஏராளமான மக்களும் மாநாட்டுத் திடலுக்கு சென்றிருந்தனர்.
மாநாடு நடைபெற்ற பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கண்ணும் கருத்துமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும், அங்கு உயிரிழப்பு தவிர்க்க இயலாத விஷயமாக மாறியிருப்பது, தவெக தலைவர் விஜய்க்கு மிகுந்த மன வேதனையளித்திருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் பொறுப்பு வகித்த வழக்கறிஞர் VL.சீனிவாசன், திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர் பொறுப்பு வகித்த ஜே. கே. விஜய்கலை,
தவெக உறுப்பினர்களான சென்னை பாரிமுனைப் பகுதியைச் சேர்ந்த ரியாஸ், வசந்தகுமார், வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த சார்லஸ், செஞ்சியைச் சேர்ந்த உதயகுமார் ஆகியோர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாநாட்டில் கலந்துகொள்ளச் செல்லும்போதும், மாநாட்டு நிகழ்விடத்திலும் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் விஜய்.
அவர் வெலியிட்டுள்ள பதிவில், “6 பேர் நம்மிடையே இல்லையென்ற செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இந்த துயரச் செய்தியைக் கேட்டு தாங்கிக் கொள்ள இயலாத அளவுக்கு மன வேதனை அடைந்திருப்பதாகவும், இத்துயரிலிருந்து வெளிவர இயலாமல் தன் மனம் தவிப்பதாகவும்” விஜய் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “கழகத்துக்காக இவர்கள் ஆற்றிய பணிகள் கழக வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும். கழகத் தோழர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதாகவும்” விஜய் கவலையுடன் பதிவிட்டுள்ளார்.
“உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காகத் தோழர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்பவும் பிரார்த்திப்பதாகவும்” விஜய் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.