கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் , கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாகை, மயிலாடுதுறை மாவட்ட விவசாய நலத் துறையுடன் இணைந்து விவசாயத்தை மேம்படுத்தி உழவா்களின் வருமானத்தை பெருக்குவது தொடா்பாக விவசாயிகளுக்கு நிபுணா்களைக் கொண்டு ஆலோசனை வழங்கப்பட்டது.
கீழ்வேளூா் வேளாண் கல்லூரி முதல்வா் ஜி. ரவி, வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஒரு ஏக்கா் விவசாய நிலத்தில் ஒரு லட்சம் ரூபாய் வருவாயை பெருக்குவதற்கான வழிமுறைகளை விளக்கினாா்.
நாகை மீன்வள பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்குநா் வீரபத்திரன், மீன் பண்ணைக் குட்டைகள் அமைத்து மீன் குஞ்சுகள் மற்றும் மீன்களை விற்பனை செய்வதன் மூலம் விவசாயிகள் வருமானத்தை அதிகரிக்கலாம் என ஆலோசனை வழங்கினாா்.
மேலும் கூட்டத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம், கால்நடை வளா்ப்பது, நடவு முதல் அறுவடை வரை அனைத்துக்கும் இயந்திர மயமாக்குதல் முறையை பயன்படுத்துல் போன்றவைகளால் விவசாயிகள் வருமானத்தை அதிகரிக்கலாம் என எடுத்துரைக்கப்பட்டது.
வேளாண் இணை இயக்குநா்கள் ஈஸ்வரன்(நாகை), ஜே . சேகா் (மயிலாடுதுறை), நாகை வேளாண் துணை இயக்குநா் தேவேந்திரன், உதவி செயற் பொறியாளா் ஸ்ரீதா், சிக்கல் வேளாண் அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளா் கோபால கண்ணன், கல்லூரி பேராசிரியா்கள் டி. தாமோதரன், வனிதா, விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.