தஞ்சாவூரில் இன்று காதணி விழா நடைபெற இந்த நிலையில், மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காதணி விழா
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே இந்தளூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் சுந்தர். இவரது மகன் சாய்ராம். இவர் வேங்கூரில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இன்று (செப். 4) இவருக்கு காதணி விழா நடைபெற இருந்தது.
இதற்காக காலை எழுந்து தனது அண்ணன் முரளியுடன் இந்தளூர் பாலம் அருகில் உள்ள கல்லணை கால்வாயில் குளிக்க சென்றுள்ளார். அப்போது குளித்துக் கொண்டிருக்கும் பொழுது நீரோட்டத்தின் வேகம் காரணமாக ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.
தனது தம்பியை காப்பாற்றும் முயற்சியில் அண்ணன் ஈடுபட்டும் அவரால் காப்பாற்ற முடியவில்லை. இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
உடல் மீட்பு
தகவலின் பேரில் வந்த தீயணைப்புத் துறையினர் மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு மாணவனின் உயிரற்ற சடலத்தை தான் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
இன்று காதணி விழா நடைபெற இருந்த நிலையில் மாணவன் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.