பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரக் கோரி தொடரப்பட்ட வழக்கில் 4 வாரத்தில் பதில் அளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் அனைத்து பொருள்களுக்கும் ஒரே வரியாக சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) கடந்த 2017ல் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் பெட்ரோலியப் பொருள்கள் இதில் கொண்டுவரப்படவில்லை.
இந்நிலையில், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வந்து நாடு முழுவதும் ஒரே விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கனகராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், தற்போது ரஷியாவில் இருந்து குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் வாங்குவதால், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால், அவற்றின் விலை கணிசமாகக் குறையும், மக்கள் பயன்பெறுவார்கள் என்று வாதிடப்பட்டது.
நீதிபதிகள், 'பெட்ரோலிய பொருள்கள் மூலமாக வரும் வருவாயில்தான் மாநிலங்களில் ரேஷன் பொருள்கள் உள்ளிட்ட இலவசங்கள் வழங்கப்படுகிறது. அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் எப்படி கேள்வி கேட்க முடியும்' என்றனர்.
தொடர்ந்து கடந்த 2020ல் தொடரப்பட்ட ஒரு வழக்கில், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவது குறித்து மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்று கூறியதை நினைவுபடுத்தி, அதுகுறித்து என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினர்.
மேலும் 4 வாரங்களுக்குள் மத்திய அரசு இதுகுறித்து பதில் அளிக்க வேண்டும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.