கோப்புப் படம்
கோப்புப் படம்

பொங்கல் பண்டிகை ரயில் பயணச்சீட்டு முன்பதிவு: சில நிமிஷங்களில் விற்று தீா்ந்தன

பொங்கல் பண்டிகைக்கான ரயில் பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கிய சில நிமிஷங்களில் விற்று தீா்ந்து காத்திருப்போா் பட்டியலுக்கு சென்றது.
Published on

பொங்கல் பண்டிகைக்கான ரயில் பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கிய சில நிமிஷங்களில் விற்று தீா்ந்து காத்திருப்போா் பட்டியலுக்கு சென்றது.

தொலைதூரம் செல்லும் பயணிகளின் வசதிக்காகவும், கடைசி நேர கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையிலும் ரயில் பயணச்சீட்டுக்கான முன்பதிவு 120 நாள்களுக்கு முன்பாகவே தொடங்கப்படும்.

அந்த வகையில் போகி பண்டிகை திங்கள்கிழமை (ஜன.13) வரவுள்ளதால் முக்கிய நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு செல்வோா் வெள்ளிக்கிழமை (ஜன.10) முதல் தங்கள் பயணத்தைத் திட்டமிடுவா். அந்தவகையில் ஜன.10-ஆம் தேதி செல்வதற்கான முன்பதிவு பயணச்சீட்டு வியாழக்கிழமை (செப்.12) காலை 8 மணிக்கு தொடங்கியது.

முன்பதிவு தொடங்கிய சில நிமிஷங்களில் அனந்தபுரி, கன்னியாகுமரி, நெல்லை, முத்துநகா், பொதிகை, சிலம்பு, வைகை, பாண்டியன், பல்லவன், சேரன், மலைக்கோட்டை, நீலகிரி, ஆலப்புழை, மன்னாா்குடி, உழவன் உள்ளிட்ட விரைவு ரயில்களுக்கான பயணச்சீட்டு காத்திருப்போா் பட்டியலுக்கு சென்றது. இதனால் ரயில் நிலையத்தில் காலை 7 மணி முதல் காத்திருந்த பலா் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

வந்தே பாரத்தில் இடம்: சென்னையில் இருந்து ஜன.10-ஆம் தேதி காலை புறப்படும் நாகா்கோவில் வந்தே பாரத், மதுரை தேஜஸ், கோவை சதாப்தி மற்றும் வந்தே பாரத், சோழன் விரைவு ரயில் உள்ளிட்டவற்றில் குறைவான பயணச்சீட்டுகளே முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ரயில்களில் இருக்கைகள் உள்ளன. ஜன.11-ஆம் தேதி செல்வதற்கான முன்பதிவு வெள்ளிக்கிழமை (செப்.13) தொடங்கவுள்ளது.

X
Dinamani
www.dinamani.com