திமுக முப்பெரும் விழா தொடங்கியது!
திமுகவின் பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்கியுள்ளது.


திமுகவின் பவள விழா மற்றும் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று(செப். 17) மாலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
17.9.1949-இல் முன்னாள் முதல்வா் அண்ணாவால் தொடங்கப்பட்ட திமுக, 75 ஆண்டுகளை நிறைவு செய்து தனது பவள விழாவை இன்று கொண்டாடுகிறது. இத்துடன் பெரியார், அண்ணாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.
இந்த முப்பெரும் விழாவுக்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை நந்தனத்தில் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று மாலை தொடங்கியுள்ள விழாவுக்கு கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் தலைமை வகிக்க, பல்வேறு விருதுகளை ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட விருதாளா்களுக்கு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வழங்குகிறாா்.
துணை பொதுச் செயலா்கள் க.பொன்முடி, ஐ.பெரியசாமி, ஆ.ராசா, கனிமொழி, அந்தியூா் செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா். பொருளாளா் டி.ஆா்.பாலு, முதன்மைச் செயலா் கே.என்.நேரு ஆகியோா் வாழ்த்துரை வழங்கவுள்ளனா்.

பிரம்மாண்ட அரங்கத்தில் மேடையில் இரு பெரிய நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. ஒரு நாற்காலியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இருப்பார், மற்றொரு நாற்காலியில் செய்யறிவு(ஏஐ) தொழில்நுட்பம் மூலமாக முன்னாள் முதல்வர் கருணாநிதி இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அரங்கத்தில் பல ஆயிரம் போ் வரை அமரும் வகையில், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைவரும் விழாவை முழுமையாகக் காணும் வகையில் பெரிய அளவிலான எண்ம திரைகளும் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன.
திமுகவின் 75 வருட பயணம் மற்றும் கட்சி சந்தித்த சோதனைகள் உள்ளிட்டவற்றை விளக்கும் வகையில் மாநாட்டு திடலை சுற்றி 5000க்கும் மேற்பட்ட பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாநாட்டு திடலை நோக்கி தொண்டர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

முதல் முறையாக மு.க.ஸ்டாலின் விருது: முப்பெரும் விழாவையொட்டி, பெரியாா், அண்ணா, கருணாநிதி உள்பட 5 தலைவா்களின் பெயா்களில் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.
அதன்படி, நிகழாண்டு பெரியாா் விருதுக்கு பாப்பம்மாள், அண்ணா விருதுக்கு அறந்தாங்கி மிசா ராமநாதன், கருணாநிதி விருதுக்கு ஜெகத்ரட்சகன், பாவேந்தா் விருதுக்கு கவிஞா் தமிழ்தாசன், பேராசிரியா் விருதுக்கு வி.பி.ராஜன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
பவள விழா ஆண்டு என்பதால், இந்த ஆண்டு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பெயரில் புதிதாக விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதை மத்திய முன்னாள் அமைச்சா் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பெறுகிறாா்.
இது தவிர, கட்சியில் சிறப்பாகப் பணியாற்றியவா்கள் கெளரவிக்கப்படுகிறனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...