
சென்னை புளியந்தோப்பு பகுதியில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் ரௌடி காக்கா தோப்பு பாலாஜி கொல்லப்பட்டார்.
காக்கா தோப்பு பாலாஜி மீது 5 கொலை வழக்குகள் உட்பட 56 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
என்கவுண்டர் நடந்தது எப்படி?
நீண்டகாலமாக தலைமறைவாக இருந்து வந்த ரௌடி காக்கா தோப்பு பாலாஜி குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில், வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகேயுள்ள பிஎஸ்என்எல் குடியிருப்பு பகுதியில் காவல்துறையினர் ஆய்வு நடத்தினர்.
அங்கு பதுங்கியிருந்த பாலாஜி, காவல்துறையினரைக் கண்டதும், அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதனையடுத்து, தற்காப்புக்காக காவல்துறையினர், பாலாஜி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த என்கவுன்டரில் ரௌடி காக்கா தோப்பு பாலாஜி உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற துணை ஆணையர் விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க, அப்பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை காவல் ஆணையராக அருண் குமார் பொறுப்பேற்ற பிறகு, இது இரண்டாவது என்கவுண்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
5 கொலை வழக்குகள்
காக்கா தோப்பு பாலாஜி மீது 5 கொலை வழக்குகள் உள்பட 56 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, பில்லா சுரேஷ் மற்றும் ரௌடி விஜி ஆகியோர் மீதான கொலை வழக்குகள் உள்ளிட்ட 5 கொலை வழக்குகளும்,15 கொலை முயற்சி வழக்குகளும் உள்ளன. இவர், வடசென்னை பகுதியில் நாகேந்திரனின் கூட்டாளியாகவும் இருந்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் சம்போ செந்தில் தரப்பினர், 2020-ஆம் ஆண்டு தேனாம்பேட்டை அருகே ரௌடி பாலாஜியை கொல்ல முயற்சித்தது.
2021-ஆம் ஆண்டில், ஆயுதத் தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார் பாலாஜி. இதையடுத்து, சிறையில் இருந்து வெளிவந்த அவர், தலைமறைவாக இருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.