சென்னையில் தெருநாய்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக உலகளாவிய கால்நடை சேவை தெரிவித்துள்ளது.
ஆறு ஆண்டுகளில் அபாரம்
சென்னை மாநகராட்சியில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாடு விலங்கு நல வாரியம், உலகளாவிய கால்நடை சேவை ஆகியோர் நடத்திய சமீபத்திய கணக்கெடுப்பின்படி, சென்னையில் 2018 ஆம் ஆண்டில் 57,336 ஆக இருந்த தெரு நாய்களின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் சுமார் 1.8 லட்சத்தை எட்டியுள்ளது.
2018 நாய்கள் மக்கள்தொகை கணக்கெடுப்பில் 57,366 தெரு நாய்கள் இருந்ததில் இருந்து தெரு நாய்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இதன்மூலம், நகரத்தில் தெரு நாய்களில் 27 சதவிகிதம் மட்டுமே கருத்தடைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதும், மீதமுள்ள 73 சதவிகித நாய்களுக்கு செயல்படுத்தப்படவில்லை என்பதும் தெரிகிறது.
அம்பத்தூர் முதலிடம்
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில், அம்பத்தூரில்தான் அதிக எண்ணிக்கையிலாக 23,980 நாய்கள் உள்ளன; இரண்டாவதாக மாதவரம் 12,671 நாய்களுடன் உள்ளது. ஆலந்தூரில் குறைவான எண்ணிக்கையில் 4,875 நாய்கள் உள்ளன.
இதன்மூலம், நகரத்தின் 15 மண்டலங்களில் கருத்தடை விகிதங்களில் கடுமையான ஏற்றத்தாழ்வை தரவு காட்டுகிறது. பெரும்பாலும் விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு மையங்களின் சீரற்ற பங்களிப்பும் காரணமாகும்.
குறிப்பாக வடக்கு மண்டலங்களில் 7, 3, 4 மண்டலங்கள் குறிப்பிடத்தக்க வகையில் குறைந்தளவிலான கருத்தடை விகிதங்களைக் கொண்டுள்ளன. இந்த பகுதிகளில் விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தைக் கொண்டுள்ளது.
கருத்தடையுடன் மருத்துவத் தலையீடும் வேண்டும்
உலகளாவிய கால்நடை சேவையின் நாய்கள் மக்கள்தொகை பணிக்குழுவின் இயக்குனர் கார்லெட் அன்னே பெர்னாண்டஸ், ``நாய்களால் ஆறு மாதங்களில் 12 குட்டிகளை இனப்பெருக்கம் செய்ய முடியும் என்பதால், தடுப்பு நடவடிக்கைகள் சரியாக செயல்படுத்தப்படாவிட்டால் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.
கூடுதலாக, இந்த கணக்கெடுப்பின் மூலம் நகரத்தில் தெரு நாய்களின் சுகாதார நிலைமைகள் குறித்தும் தெரிய வந்துள்ளது. 95 சதவிகித நாய்கள் பல்வேறு சுகாதார பிரச்னைகளைக் கொண்டுள்ளன.
இவற்றில், 66 சதவிகித நாய்கள் காயங்களுடனும், 24 சதவிகிதம் நொண்டியாகவும், 6 சதவிகிதம் பரவக்கூடிய பாலியல் நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தரவுகள் கூறுகின்றன. மேலும், கருத்தடை முயற்சிகளுடன் மருத்துவ தலையீட்டின் அவசியத்தையும் தரவுகள் வலியுறுத்துகின்றன" என்று கூறினார்.
குறைந்த கருத்தடை விகிதங்கள் மற்றும் அதிக தெரு நாய்கள் உள்ள பகுதிகளுக்கு முன்னுரிமை வழங்குமாறு மாநகராட்சியை விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு மையம் வலியுறுத்தியது.
"இந்த மண்டலங்களில் புதிய விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு மையங்களை நிறுவுவதும் முக்கிய உத்திகளாக பரிந்துரைக்கப்பட்டன" என்று கார்லெட் கூறினார்.
கணக்கெடுக்கப்பட்ட நாய்களில் 82 சதவிகிதம் முதிர்வயது நாய்களும், 18 சதவிகிதம் 11 மாதங்களுக்கும் குறைவான நாய்களாகவும் இருப்பதாகக் கூறுகிறது.
ஆய்வுக்காக ரூ. 5 லட்சம்
உலகளாவிய கால்நடை சேவை நடத்திய இந்த ஆய்வில் கல்லூரி மாணவர்கள், கால்நடை மருத்துவர்கள், மாநகராட்சி ஊழியர்கள் உள்பட மொத்தம் 86 பேருடன், ஜூன் மாதத்தில் 1,672 கி.மீ. தொலைவில் இருசக்கர வாகனங்களில் தெரு நாய்களை எண்ணுவதன் மூலம் நாய்களின் மக்கள்தொகை கணக்கெடுப்பை சுமார் ரூ. 5 லட்சம் செலவில் மேற்கொண்டுள்ளது.