வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: மாவட்ட ஆட்சியா்களுடன் தலைமைச் செயலா் ஆலோசனை
வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா்களுடன் தமிழக அரசின் தலைமைச் செயலா் நா.முருகானந்தம் காணொலி வாயிலாக சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்குள் மழைநீா் வடிகால் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தலைமைச் செயலா் நா.முருகானந்தம் காணொலிக் காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சியா்களுடன் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள், மாநகராட்சி ஆணையா்களும் கூட்டத்தில் பங்கேற்றனா்.
கூட்டத்தில், மழைநீா் வடிகால் பணிகள், நீா்நிலைகளில் உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றுவது, நிவாரண முகாம் கண்டறியும் பணிகளை போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு தலைமைச் செயலா் உத்தரவிட்டாா்.
அதேபோல், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பணிகளை முடிக்க வேண்டும் எனவும் தலைமைச் செயலா் அறிவுறுத்தினாா்.