செவிலியர்களை கௌரவிக்கும் சிபாகா மிஸ் நைட்டிங்கேல் விருது!
சென்னை: செவிலியர்களை கௌரவிக்கும் வகையில், சிபாகா மிஸ் நைட்டிங்கேல் விருது 2024 நிகழ்ச்சி சென்னையில் வெகு விமரிசையாக நடத்தப்பட்டு, மூன்று செவிலியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு முழுவதிலிருந்தும் 2000-க்கும் மேற்பட்ட செவிலியர்களை ஒன்றிணைத்து, அவர்களின் திறமை, அர்ப்பணிப்பு மற்றும் உறுதியைக் கொண்டாடும் நிகழ்வாக மிஸ் நைட்டிங்கேல் விருது சென்னையில் செப். 22-ல் நடைபெற்றது.
இந்த முன்முயற்சி, செவிலியர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கவும், புதிய யோசனைகளைக் கொண்டுவரவும், அவர்கள் பல்வேறு திறன்களை வெளிப்படுத்தவும் உதவுவதற்காக தொடங்கப்பட்டதாக சிபாகா தெரிவித்துள்ளது.
நைட்டிங்கேல் விருதுக்கு, எட்டு சுற்று தேர்வுகள் நடத்தி, 10 பேர் இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இறுதிச் சுற்றின் முடிவில், திண்டுக்கல் மருத்துவமனையில் பணியாற்றும் கயல்விழி இரண்டாம் பரிசு பெற்றார். சென்னை தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் என். ஆர்த்தி முதல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து, மிஸ் நைட்டிங்கேல் விருது 2024 என்ற பட்டம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றிவரும் எஸ்தர் மனோவா ஜெனிபருக்கு வழங்கப்பட்டது.
சிபாகா நிர்வாக இயக்குநர் டாக்டர் ராஜா அமர்நாத், இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை பற்றி பேசுகையில், செவிலியர்கள் தான் மருத்துவத் துறையின் கண்ணுக்குத் தெரியாத சக்தி. மிஸ் நைட்டிங்கேல் விருது, இந்த மறக்கப்பட்ட நாயகர்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதற்கான துவக்கம் மட்டுமே எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க.. தில்லியில் அதிகரிக்கும் டெங்கு: ஒரே வாரத்தில் 300 பேர் பாதிப்பு!
சிறப்பு அழைப்பாளர்களாக இயக்குநரும் தயாரிப்பாளருமான லிங்குசாமி, நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.
சிபாகா (சென்னை நுரையீரல் சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு சங்கம்) என்பது, இந்தியாவின் மருத்துவ துறையில் முன்னணியில் விளங்கும் நிறுவனம் ஆகும், இது கிராம மற்றும் நகரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு உலக தரத்திலான தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான சேவைகளை வழங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேலும், நவீன தொழில்நுட்ப மருத்துவ சிகிச்சையில் பின்தங்கியிருக்கும் பல்துறை தீவிர சிகிச்சைப் பிரிவை நிறுவுவதிலும் நிபுணத்துவம் பெற்றுள்ள அமைப்பாகும்.