சென்னை புறநகர் ரயில் சேவையைப் பயன்படுத்தும் பயணிகளின் பயண நேரம் கூடுதலாக 10 நிமிடங்கள் அதிகரிக்கவிருக்கிறது.
அதாவது, சென்னை - திருவள்ளூர் இடையேயான பயண நேரம், தற்போதிருப்பதை விடவும் கூடுதலாக 10 நிமிடங்கள் அதிகரிக்கவிருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதாவது, ஆவடி - அம்பத்தூர் இடையே மெட்ரோ குடிநீர் வாரியத்தின் குழாய்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருவதால், இந்தப் பகுதியில் அதாவது 6 கிலோ மீட்டர் தொலைவுக்கு மட்டும் ரயில்கள் மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டும் இயக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது, இப்பகுதியில் ரயில்கள் 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.
கடந்த திங்கள்கிழமை, இப்பணிகளின்போது, தண்டவாளம் அருகே பிரச்னை ஏற்பட்டதால், காலை 8 மணி முதல், ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டு, ரயில் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
மெட்ரோ குடிநீர் வாரிய ஊழியர்கள் பராமரிப்புப் பணியை மேற்கொண்டபோது, குழாயில் உடைப்பு ஏற்பட்டதாகவும் இதற்குக் காரணமாகக் கூறப்பட்டது. இதனால், 8 மணிக்கு நிறுத்தப்பட்ட ரயில் சேவை 9 மணிக்குத்தான் மீண்டும் தொடங்கியது. இந்த நிலையில்தான், பணிகள் முடியும் வரை இப்பகுதியில் ரயில் இயக்கப்படும் வேகத்தைக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மெட்ரோ குடிநீர் பணிகள் முடிந்தபிறகு, மீண்டும் பழைய வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.