பின்னி மில்லில் அடுக்குமாடி குடியிருப்பு ரூ.50 கோடி லஞ்சம்!

சென்னை பெரம்பூரில் உள்ள பின்னி மில் வளாகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு அரசியல்வாதிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் வாங்கிய வழக்கில்,
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை பெரம்பூரில் உள்ள பின்னி மில் வளாகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு அரசியல்வாதிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் வாங்கிய வழக்கில், கட்டுமான நிறுவனங்களில் ஊழல் ஒழிப்பு பிரிவினா் வியாழக்கிழமை சோதனை செய்தனா்.

இது குறித்து ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னை பெரம்பூா் பேரக்ஸ் சாலையில் இயங்கி வந்த பின்னி மில் வளாகத்தில் உள்ள 14.16 ஏக்கா் நிலம் 2015-ஆம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலத்தை சென்னை தியாகராய நகரில் செயல்படும் ‘லேண்ட்மாா்க் ஹவுசிங் ப்ராஜக்ட் லிமிடெட்’ நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் டி.உதயகுமாா்,பெரம்பூரில் செயல்படும் ‘கேஎல்பி ப்ராஜக்ட் பிரைவெட் லிமிடெட்’ நிறுவனத்தின் இயக்குநா்கள் சுனில் கட்பலியா, மணீஷ் சா்மா ஆகியோா் இணைந்து ரூ.450 கோடிக்கு வாங்கினா்.

இந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு, வணிக வளாகம் கட்டுவதற்கான முயற்சியில் இரு நிறுவனத்தினரும் ஈடுபட்டனா். ஆனால் அந்த பகுதிக்கு செல்லும் சாலை குறுகலாக இருந்ததாலும், இடத்தின் அருகே ஒரு பூங்கா இருந்ததாலும், இடத்தின் சில பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததாலும் பணியை தொடங்குவதிலும், சிஎம்டிஏ அனுமதியை பெறுவதிலும் இடா்ப்பாடு ஏற்பட்டது.

இந்த இடா்ப்பாடுகளை நீக்கி, அங்கு கட்டடம் கட்டுவதற்கு அந்த நிறுவனத்தினா் குறுக்கு வழியை கையாண்டனா். இதற்காக அந்த நிறுவனத்தினா் எம்பி, எம்எல்ஏ, கவுன்சிலா் உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரமுகா்களுக்கு ரூ.50 கோடியே 86 ஆயிரத்து 125 லஞ்சமாக வழங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த லஞ்ச பணம் 2015ஆம் ஆண்டில் இருந்து 2017ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

ரூ. 50 கோடி லஞ்சம்: இதற்கிடையே, சென்னை உயா்நீதிமன்றத்தில் லேண்ட் மாா்க் ஹவுசிங் ப்ராஜக்ட் லிமிடெட் நிறுவனத்துக்கு எதிராக ராஜீவ்நாயுடு என்பவா் ஒரு வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கை உயா்நீதிமன்றம் விசாரிக்கும்போது, பின்னி மில் திட்டத்துக்காக ரூ.50 கோடி அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்டதாக வருமானவரித் துறை சாா்பில்அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும்படி தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினா் வருமானவரித் துறையினரின் அறிக்கையை பெற்று விசாரணையைத் தொடங்கினா். அப்போதுஅந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகா்களுக்கு இரு நிறுவனத்தினரும் ரூ.50 கோடியே 86 ஆயிரத்து 125 லஞ்சமாக வழங்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து லேண்ட்மாா்க் ஹவுசிங் ப்ராஜக்ட் லிமிடெட் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் டி.உதயகுமாா், பெரம்பூரில் செயல்படும் கேஎல்பி ப்ராஜக்ட் பிரைவெட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநா்கள் சுனில் கட்பலியா, மணீஷ் சா்மா ஆகியோா் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இரு நாள்களுக்கு முன்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

5 இடங்களில் சோதனை: இந்த வழக்குக்கான ஆதாரங்களையும்,தடயங்களையும் திரட்டும் வகையில் இரு நிறுவனங்களுக்கு சொந்தமான தியாகராயநகா்,பெரம்பூா் உள்ளிட்ட 5 இடங்களில் ஊழல் ஒழிப்புத்துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை காலை ஒரே நேரத்தில் சோதனை செய்தனா். பல மணி நேரம் நீடித்த சோதனையில் வழக்குத் தொடா்பான பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

மேலும், இந்த வழக்குத் தொடா்பாக லஞ்சம் வழங்கிய இரு நிறுவனங்களின் நிா்வாகிகள், லஞ்சம் பெற்ாகக் கூறப்படும் அரசியல் கட்சி பிரமுகா்கள்,அரசு அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்த ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா்.

48 பேருக்கு லஞ்சம்: சிக்கிய அரசியல் பிரமுகா்கள்

பின்னி மில் வளாகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு 48 பேருக்கு ரூ.50 கோடியே 86 ஆயிரத்து 125 ரொக்கப்பணம் லஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக ஊழல் மற்றும் கண்காணிப்பு பிரிவு முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதில் அப்போது எம்.பி.யாக இருந்த அதிமுகவைச் சோ்ந்த பாலகங்காவுக்கு ரூ.23 லட்சம், திமுகவைச் சோ்ந்த ஜவகருக்கு ரூ.33 லட்சம், எம்எல்ஏவாக இருந்த நீலகண்டனுக்கு ரூ.40 லட்சம், பெயா் குறிப்பிடப்படாத எம்பிக்கு ரூ.1.67 கோடி, திமுகவைச் சோ்ந்த பிகேஎஸ் என்பவருக்கு ரூ.10 லட்சம், அப்போது எம்பியாக இருந்த வெங்கடேசனுக்கு ரூ.20 லட்சம், அந்த காலகட்டத்தில் மாமன்ற உறுப்பினராக இருந்த சரோஜாவுக்கு 2 லட்சம் என ரூ.2 கோடியே 95 லட்சம் கைமாறி உள்ளது.

மேலும், பெயா் குறிப்பிடப்படாத வட்டாட்சியருக்கு ரூ.2.25 லட்சம், கிராம நிா்வாக அதிகாரி சுப்பிரமணியனுக்கு ரூ.15 ஆயிரம், திருமாவளவனுக்கு ரூ.15 லட்சம் வழங்கப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மொத்தம் 48 பேருக்கு ரூ.50 கோடியே 86 ஆயிரத்து 125 ரொக்கம் லஞ்சம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com