மனைவியை சுத்தியலால் அடித்துக் கொன்று கணவர் தூக்கிட்டுத் தற்கொலை!

கவுந்தபாடி அருகே மனைவியை சுத்தியலால் அடித்துக் கொன்று கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஈரோடு: கவுந்தபாடி அருகே மனைவியை சுத்தியலால் அடித்துக் கொன்று கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே அம்மன் கோவில் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன்(55) வழக்குரைஞர். இவரது மனைவி கனிமொழி என்கிற காந்திமதி (46). இவர்களது மகன் கார்த்தி (25). தற்போது அஸ்ஸாம் மாநிலத்தில் விமானப் படை விமானியாக வேலைப் பார்த்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

ஈஸ்வரன், கவுந்தப்பாடி அய்யம்பாளையம் பிரிவு மற்றும் காஞ்சிகோவில் நசியனூர் பிரிவு ஆகிய இரண்டு இடங்களில் கடந்த 10 ஆண்டுகளாக சொந்தமாக பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார்.               

ஒரிசேரி புதூர் பகுதியில் உள்ள கனிமொழியின் தாய் கோயில் திருவிழாக்காக கடந்த 10 நாள்களாக தனது மகள் வீட்டில் தங்கி இருந்தார். சனிக்கிழமை இரவு 11 மணியளவில் ஈஸ்வரன் பெட்ரோல் பங்கிற்கு சென்று வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றார். பின்னர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு மீண்டும் ஈஸ்வரன் வீட்டுக்கு வந்தார். 

கனிமொழியின் தாய் வீட்டில் படுத்திருந்தார்.  பின்னர் ஈஸ்வரன் வீட்டிற்கு சென்று கதவை தாழிட்டு கொண்டார். ஞாயிற்றுக்கிழமை காலை கார்த்தி தனது தாய் கனிமொழியை கைப்பேசியில் அழைத்துள்ளார். ஆனால் அவர் கைப்பேசியை எடுக்கவில்லை. பின்னர் தந்தைக்கு போன் செய்தார் அவரும் கைப்பேசியை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கார்த்தி பக்கத்து வீட்டில் உள்ள தனது சித்திக்கு கைப்பேசியில் தொடர்புகோண்டு விவரத்தை கூறி தனது வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.        

இதனையடுத்து, அவரது சித்தி வீட்டுக்கு வந்து கதவை தட்டியுள்ளார். ஆனால் பதில் ஏதும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்தவர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன்  வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் உள்ள அறையில் கட்டிலில் படுத்திருந்த கனிமொழி தலையில்  ரத்தம் வடிந்த நிலையில்  இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கட்டில் அருகே சுத்தியல் கிடந்தது. 

பின்னர் வீட்டின் உள்ள சமையல் அறையில் சென்று பார்த்த போது அங்கு ஈஸ்வரன் தூக்கிட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து கவுந்தப்பாடி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

கோபி டிஎஸ்பி தங்கவேல், கவுந்தப்பாடி காவல் நிலைய ஆய்வாளர் சுபாஷ் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கனிமொழி, ஈஸ்வரன் ஆகிய இருவரின் சடலங்களை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கவுந்தப்பாடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் அதிகாலை பெட்ரோல் பங்கில் இருந்து வீட்டுக்கு வந்த ஈஸ்வரனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஈஸ்வரன் வீட்டில் இருந்த சுத்தியலால் மனைவி கனிமொழி தலையில் அடித்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே  அவர் இறந்து விட்டார். 

இதன்பிறகு ஈஸ்வரன் சமையல் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. குடும்ப தகராறில் மனைவியை கொன்று கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கவுந்தப்பாடி பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com