தமிழகத்தில் போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கம்!

தமிழகத்தில் ஒருசில இடங்களை தவிர 90 சதவீதத்துக்கு மேல் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: தமிழகத்தில் ஒருசில இடங்களை தவிர 90 சதவீதத்துக்கு மேல் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் இன்றுமுதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிஐடியு, ஏஐடியுசி,அண்ணா தொழிற்சங்கப்பேரவை உள்ளிட்ட பிரதான தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், ஐஎன்டியூசி, தொமுச தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இருந்து விலகியுள்ளனர்.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத தொழிற்சங்க ஓட்டுநர்களை வைத்து முழு அளவிலான பேருந்துகளை இயக்க மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

அனைத்து பணிமனைகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இன்று காலை நிர்ணயிக்கப்பட்டதைவிட கூடுதலாக 104.51 சதவிகிதம் அளவுக்கு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை, சேலம், திருநெல்வேலி, மதுரை, கோவை, கும்பகோணம் உள்ளிட்ட கோட்டங்களில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தஞ்சை, காஞ்சிபுரம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து செல்லும் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள் கூறுகையில், “வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத தொழிற்சங்கத்தை சார்ந்த முழு அளவிகான ஊழியர்களையும் அரசு பயன்படுத்தியுள்ளது. இன்று பிற்பகலுக்கு மேல் படிப்படியாக பேருந்து சேவை குறையும்.” எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், தேவை ஏற்பட்டால் ராணுவ பயிற்சி ஓட்டுநர்கள் மற்றும் போக்குவரத்து கழகத்தில் பயிற்சி பெற்ற ஓட்டுநர்களை கொண்டு உரிய பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com