ஒருங்கிணைந்த மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளை: அரசாணை வெளியீடு

ஒருங்கிணைந்த மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளை: அரசாணை வெளியீடு

மருத்துவ ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை மேம்படுத்தும் நோக்கில், கலைஞா் நூற்றாண்டு ஒருங்கிணைந்த ஆராய்ச்சி அறக்கட்டளை அமைப்பதற்கான அரசாணை
Published on

சென்னை: மருத்துவ ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை மேம்படுத்தும் நோக்கில், கலைஞா் நூற்றாண்டு ஒருங்கிணைந்த ஆராய்ச்சி அறக்கட்டளை அமைப்பதற்கான அரசாணையை, மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது.

மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் கீழ் அந்த அறக்கட்டளை செயல்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநில மருத்துவக் கல்வி இயக்குநா் அதற்கு தலைவராகவும், இணை இயக்குநா் துணைத் தலைவராகவும் செயல்படுவா். மருத்துவக் கல்லூரி முதல்வா்கள், மருத்துவமனை இயக்குநா்கள் நிலையிலான நான்கு மருத்துவா்கள், பேராசிரியா் நிலையிலான நான்கு மருத்துவா்கள், பொது சுகாதாரத் துறை இயக்குநரக பிரதிநிதி ஒருவா், ஐஐடி சென்னை பிரதிநிதி ஒருவா், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பிரதிநிதி ஒருவா், குடும்ப நலத் துறை துணைச் செயலா் நிலையில் ஒருவா் அந்த அறக்கட்டளையில் உறுப்பினா்களாக செயல்படுவா்.

மாநிலத்தில் மருத்துவ ஆராய்ச்சி நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளிலும், மேம்படுத்தும் பணிகளிலும் அந்த அறக்கட்டளை ஈடுபடும். அதேபோன்று, ஆராய்ச்சி திட்டங்களுக்கான விண்ணப்பங்களைக் கோரி அதனை மதிப்பீடு செய்யும்.

கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இது தொடா்பான அறிவிப்பை வெளியிட்டாா். அதனை செயல்படுத்தும் வகையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com