காங்கிரஸ் பேரியக்கத்துக்கு தன்னை ஒப்படைத்தவர் குமரி அனந்தன்! - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

காங்கிரஸ் பேரியக்கத்துக்கு தன்னை ஒப்படைத்தவர் குமரி அனந்தன் - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
குமரி அனந்தனுடன் முதல்வர் ஸ்டாலின்..
குமரி அனந்தனுடன் முதல்வர் ஸ்டாலின்..(கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

காங்கிரஸ் பேரியக்கத்துக்கு தன்னை ஒப்படைத்தவர் குமரி அனந்தன் என்று முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன் (92) வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்னை காரணமாக, சென்னையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12:15 மணியளவில் காலமானார்.

இதுபற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவரும் தமிழின்பால் பெரும்பற்று கொண்டவருமான இலக்கியச் செல்வர் அய்யா குமரி அனந்தன் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.

குமரி மாவட்டத்தில் பிறந்து, பெருந்தலைவர் காமராசரின் அடியொற்றி, காங்கிரஸ் பேரியக்கத்துக்காகத் தன்னை ஒப்படைத்துக் கொண்ட அவரது மறைவு தமிழ்ச்சமூகத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.

தனது அயராத உழைப்பால் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற அவர், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், நான்கு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தொண்டாற்றினார். நாடாளுமன்றத்தில் தமிழில் பேசுவதற்கான உரிமையை நிலைநாட்டிய பெருமை இவரையே சாரும். அதனால்தான் தலைவர் கலைஞர் அவர்கள் இதுகுறித்து குறிப்பிடும்போது, "தனிமரம் தோப்பாகாது என்ற பழமொழியை மாற்றி அமைத்துவிட்டார்" எனப் புகழாரம் சூட்டினார்.

தமிழே தன் மூச்செனத் தமிழ்த் திருப்பணிக்கு வாழ்ந்திட்ட அவரது பெருவாழ்வைப் போற்றி, அவருக்கு நமது அரசின் சார்பில் கடந்த ஆண்டு 'தகைசால் தமிழர்' விருது வழங்கி பெருமை கொண்டோம். விடுதலை நாள் விழாவில் அந்த விருதினை நான் வழங்கியபோது, என் கைகளை இறுகப்பற்றிக் கொண்டு வாஞ்சையோடு உறவாடிய அவரது நினைவு என் கண்களில் கண்ணீரைப் பெருக்குகிறது. ஏராளமான நூல்களையும் எண்ணற்ற மேடைகளையும் கண்ட அவரது தமிழால் நம் நெஞ்சங்களில் அவர் என்றும் நிறைந்திருப்பார் என ஆறுதல் கொள்கிறேன்.

'தகைசால் தமிழர்' அய்யா குமரி அனந்தன் மறைவால் வாடும் அருமை சகோதரி தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், உறவினர்கள், காங்கிரஸ் பேரியக்கத் தொண்டர்கள், அரசியல் மற்றும் இலக்கிய வட்டங்களைச் சேர்ந்த சொந்தங்கள் என அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com