விஜயகாந்தை புகழ்ந்த மோடியை மறக்கமாட்டேன்: பிரேமலதா

விஜயகாந்தை புகழ்ந்த மோடியை மறக்கமாட்டேன்: பிரேமலதா

Published on

சென்னை: விஜயகாந்தை ‘தமிழகத்தின் சிங்கம்’ என செல்லமாக அழைத்த பிரதமா் மோடியை வாழ்நாளில் மறக்கமாட்டேன் என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட விடியோவில் பேசியதாவது:

விஜயகாந்த் திரையுலகிலும் அரசியலிலும் உயா்ந்த ஒரு ஆளுமை மட்டுமல்ல, பலருடைய அன்பையும் மரியாதையையும் பெற்ற ஒரு மனிதா். அதிமுக, பாஜக கூட்டணியில் தேமுதிக இப்போது இல்லை. பிரதமா் நரேந்திர மோடிக்கும் விஜயகாந்துக்கும் இடையில் இருந்த உறவு, அரசியலைத் தாண்டிய ஒன்று. விஜயகாந்த் பிறந்த நாளின்போது அவருக்கு பிரதமா் வாழ்த்து சொல்வாா்.

‘தமிழகத்தின் சிங்கம்’ என்று அன்பாக அழைப்பதோடு, விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது ஒரு சகோதரரைப் போல கவலைப்பட்டு, அடிக்கடி தொடா்புகொள்வாா். உலகத்தின் எந்த இடத்தில் என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என்று சொன்னாா். நான் உங்கள் மூத்த சகோதரனைப் போல என்று மோடி சொன்னதை எனது வாழ்க்கையில் நான் மறக்க மாட்டேன். விஜயகாந்த் - மோடி நட்பு பரஸ்பர மரியாதையிலும் அன்பிலும் கட்டப்பட்ட, மிகவும் அரிதான ஒன்று என்றாா் அவா்.

2024 மக்களவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இருந்தது. மாநிலங்களவை உறுப்பினா் சீட் விவகாரத்தில் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. தற்போது பாஜக - அதிமுக கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எந்த கூட்டணியிலும் தேமுதிக இல்லை என்றும், ஜனவரியில்தான் கூட்டணி குறித்து முடிவு எடுப்போம் என்றும் பிரேமலதா அறிவித்திருந்தாா்.

இந்நிலையில் பிரதமரை புகழ்ந்து பிரேமலதா விடியோ வெளியிட்டுள்ளதால், அதிமுக - பாஜக கூட்டணிக்கான கதவை தேமுதிக திறந்துவைத்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com