
ஒசூர்: டீசல் மற்றும் சுங்கக் கட்டண உயர்வை கண்டித்து கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை துவங்கி உள்ளனர். இதனால் தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் லாரிகள் தமிழக எல்லையான ஒசூரில் வரிசையில் காத்திருக்கின்றன .
மத்திய அரசு டீசல் மற்றும் சுங்கக் கட்டணத்தை உயர்த்தி உள்ளதற்கு இந்தியா முழுவதும் லாரி உரிமையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் லாரி உரிமையாளர்கள் ஏப். 15 முதல் லாரிகள் வேலை நிறுத்தம் செய்யப்படும் என உரிமையாளர்கள் அறிவித்து இருந்தனர். இதனால் இன்று செவ்வாய்க்கிழமை கர்நாடக மாநிலம் முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தமிழகத்திலிருந்து வட மாநிலங்களுக்கு கர்நாடக வழியாக செல்லும் லாரிகள் உள்பட அனைத்து லாரிகளும் தமிழக எல்லையான ஒசூரில் நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், கர்நாடக மாநிலம் வழியாக தமிழகத்திற்கு வர வேண்டிய லாரிகளும் கர்நாடக மாநில எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் ஒசூரில் இருந்து தினமும் 2000-க்கும் மேற்பட்ட கனிம வளங்கள் ஜல்லி, மணல் போன்றவை கர்நாடக மாநிலத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் லாரி உரிமையாளர்கள் மாநில எல்லையில் நிறுத்தி வைத்துள்ளனர்.
மேலும் ஒசூரில் விளையும் காய்கறிகள் மற்றும் கேரளம், தமிழகத்திலிருந்து வட மாநிலங்களுக்குச் செல்லும் லாரிகளும் ஒசூரில் நிறுத்தப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் இருந்து கர்நாடக மாநிலம் வழியாக செல்லும் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஒசூரில் விளையும் காய்கறிகள் விலை குறைய வாய்ப்புள்ளது. மேலும் வெளி மாநிலங்களில் இருந்து பருப்பு உள்ளிட்ட பொருள்கள் தமிழகத்துக்கு வருவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: கர்நாடகத்தில் லாரி உரிமையாளா்கள் நள்ளிரவுமுதல் வேலைநிறுத்தம்!