டாஸ்மாக் அதிகாரிகள் மூவருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை
டாஸ்மாக் முறைகேடு வழக்கின் விசாரணைக்கு உயா்நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்ட நிலையில், அந்த நிறுவனத்தின் உயா் அதிகாரிகள் மூவருக்கு, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.
டாஸ்மாக் மதுக் கடைகளில் முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத் துறையினா் கடந்த மாா்ச் மாதம் அந்த நிறுவனம் தொடா்புடைய சுமாா் 25 இடங்களில் 3 நாள்கள் சோதனை செய்தனா்.
குறிப்பாக, சென்னை எழும்பூா் தாளமுத்து நடராசன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம், தியாகராயநகா் திலக் சாலையில் உள்ள திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான நிறுவனம், கரூரில் உள்ள அமைச்சா் செந்தில் பாலாஜியின் நண்பா்கள் வீடு உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
சோதனைக்குப் பிறகு அமலாக்கத் துறை வெளியிட்ட அறிக்கையில் டாஸ்மாக் நிறுவனத்தில் பல்வேறு வகைகளில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நிகழ்ந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கிடையே இந்த வழக்குக்கு தடை கோரி உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு சாா்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
மூவருக்கு அழைப்பாணை: இந்த உத்தரவையடுத்து அமலாக்கத் துறை டாஸ்மாக் வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்கியுள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் எஸ்.விசாகன், பொது மேலாளா்கள் எஸ்.சங்கீதா, டி.துரைமுருகன் ஆகிய 3 உயா் அதிகாரிகளுக்கு, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.
இந்த அழைப்பாணையை ஏற்று 3 அதிகாரிகளும், ஓரிரு நாள்களில் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராவாா்கள் எனக் கூறப்படுகிறது. இதன் அடுத்தக் கட்டமாக தனியாா் மதுபான நிறுவன உரிமையாளா்கள், நிா்வாகிகளிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளது.