இதுவரை பார்த்தது திராவிட மாடல் பாகம் ஒன்றுதான்; 2026-ல் 2.0: முதல்வர் ஸ்டாலின்

காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் உரை...
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
Published on
Updated on
2 min read

இதுவரை பார்த்தது திராவிட மாடல் பாகம் ஒன்றுதான், 2026 ஆம் ஆண்டு இரண்டாவது பாகம் தொடங்கும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் அமர்வு இன்று நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில், நேற்று தாக்கல் செய்யப்பட்ட காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்து பேசினார்.

அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

”திராவிட முன்னேற்றக் கழகம் 6-வது முறையாக ஆட்சி அமைத்து 4 ஆண்டுகள் நிறைவுபெறவுள்ளது. 5-ஆம் ஆண்டில் விரைவாக அடியெடுத்து வைக்கவுள்ளது. இதுவரை செயல்படுத்தியுள்ள திட்டங்கள், செய்திருக்கும் சாதனைகளால் 7-வது முறையாக திமுக ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

கடந்த ஆட்சியாளர்கள் செய்த நிர்வாக சீர்கேட்டால், நிர்வாக கட்டமைப்பு தரைமட்டத்துக்கு போனது. தலைநிமிர்ந்த தமிழ்நாட்டை உருவாக்க திமுகவை மக்கள் ஆட்சிக்கு கொண்டுவந்தார்கள்.

இதுவரை தமிழகம் பார்க்காத, இந்தியாவில் எந்த மாநிலமும் அடையாத சாதனையை செய்துள்ளோம். 2024-25 ஆம் ஆண்டில் இந்தியாவில் நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாடு 9.69 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது. மத்திய அரசின் புள்ளிவிவரங்களே இதனை தெரிவிக்கின்றன. இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி 6.5 விழுக்காடு. தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் 2024-25 ஆம் ஆண்டில் ரூ. 3.58 லட்சமாகும். தேசிய சராசரி ரூ. 2.06 மட்டுமே.

மின்னணு பொருள் ஏற்றுமதியில் தமிழகம் சாதனை படைத்துள்ளது. அகில இந்திய அளவில் 50 சதவிகிதம் பள்ளிகளில் மட்டுமே அறிவியல் ஆய்வக வசதி உள்ளன. ஆனால், தமிழகத்தில் 98.3 சதவிகிதம் பள்ளிகளில் இந்த வசதி உள்ளது. நமது நடுநிலைப் பள்ளிகளில் இடைநிற்றலே இல்லை. தமிழகத்தில்தான் ஆராய்ச்சிப் படிப்புகளை படிக்கும் மாணவர்கள் அதிகமாக உள்ளனர்.

மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் என அனைத்திலும் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக இருக்கின்றது. காவல்துறையில் பெண் அதிகாரிகள் தமிழகத்தில்தான் அதிகம் உள்ளனர்.

ஒருபக்கம் மத்திய அரசு, மறுபக்கம் ஆளுநர், இன்னொரு பக்கம் நிதி நெருக்கடி என அனைத்து தடைகளையும் மீறி செய்த சாதனைகள்தான் இவை. எனது அமைச்சரவையின் சாதனை இது.

அமைதியான மாநிலத்தின்தான் தொழில் வளரும், சுற்றுலாப் பயணிகள் வருவார்கள், இதற்கு காரணம் எனது துறையான காவல்துறை. சட்டம் - ஒழுங்கு சீராக இருப்பதால்தான் தமிழகத்தில் கலவரமின்றி அமைதி நிலவுகிறது.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்பவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். இது மணிப்பூர் அல்ல, ஜம்மு - காஷ்மீர் அல்ல, கும்பமேளா மரணம் இங்கு நிகழவில்லை.

பொதுமக்களும் காவல்துறையினரும் ஒருவருக்கொருவர் கனிவாக நடந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இருதரப்பினரும் நண்பர்கள் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

சட்டம் - ஒழுங்கை பாதுகாத்து இரவுபகலாக வேலை செய்யும் காவல்துறையினருக்கான தனி நாளை அறிவிக்க விரும்புகிறேன். 1859 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் நிறைவேற்றப்பட்ட செப்டம்பர் 6 ஆம் நாள் காவலர் நாள் கொண்டாடப்படும்.

இந்த நாளில், கடமை, கண்ணியத்தை பின்பற்றி செயல்பட்ட காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறை கண்காட்சிகள் நடத்தப்படும். ரத்த தான முகாம்கள் நடத்தப்படும்.

நீலகிரி, தருமபுரியில் ஆயுதப் படை காவலர்கள் குடியிருப்புகள் கட்டப்படும். காவல்துறைக்கு 350 நான்கு சக்கர வாகனங்கள் வாங்கப்படும். 50 தடயவியல் நடமாடும் வாகனங்கள் வாங்கப்படும்.

10 ஆண்டுகால அதிமுக ஆட்சியைவிட 1,000 மடங்கு சாதனைகள் செய்துள்ளோம். அடமானம் வைக்க நினைப்பவர்களாலும் அபகரிக்க நினைப்பவர்களாலும் தமிழகத்தை ஒருபோதும் சூறையாட முடியாது.

தமிழ்நாட்டுக்காக, தமிழர்களுக்காக, மாநில உரிமைகளுக்காக எனது பயணம் தொடரும். இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் பார்ட் 1 தான். 2026-ல் திராவிட மாடல் 2.0 லோடிங்” எனத் தெரிவித்தார்.

முதல்வர் பேசுகையில், அதிமுகவை விமர்சிக்கும் விதமாக ஊர்ந்து என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, யாரையும் குறிப்பிட்டு ஊர்ந்து என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com