கட்சியின் ஆட்சியாக இல்லாமல், ஒரு இனத்தின் ஆட்சி: முதல்வர் ஸ்டாலின்

"உங்க கனவ சொல்லுங்க" திட்டத்தை தொடக்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேச்சு.
முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்கோப்புப்படம்
Updated on
2 min read

ஒரு கட்சியின் ஆட்சியாக இல்லாமல், ஒரு இனத்தின் ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜன. 9) திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பாடியநல்லூரில், தமிழ்நாடு அரசின் "உங்க கனவ சொல்லுங்க" திட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றினார்.

அவர் பேசுகையில், ”மற்ற மாநிலங்களை பார்த்தீர்கள் என்றால், பெரும்பாலும், அந்த மாநிலத்தின் தலைநகரமும் முதல் நிலை நகரங்களும்தான் வளர்ந்திருக்கும்! ஆனால், நம்முடைய தமிழ்நாட்டில் தான் இப்போது இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களும் வளர்ந்திருக்கிறது! சாலைகள் - பாலங்கள் - போக்குவரத்து இணைப்பு - குடிநீர் வசதி என்று உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றிருக்கிறது! நகரங்கள் - பேரூர்கள் மட்டுமல்ல, கிராமங்களும் வளர்ந்திருக்கிறது!

இது எல்லாவற்றிற்கும் மேல் சமூகநீதி அரசை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்! ஆதிதிராவிடர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், சிறுபான்மையின மக்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர், விளிம்பு நிலை மக்கள் என்று, எல்லோருக்கும் பார்த்துப் பார்த்து நாம் செய்து கொண்டிருக்கிறோம்!

அதுவும், இவை எல்லாவற்றையும் எந்த சூழ்நிலைகளில் நாம் சாதித்துக் காட்டியிருக்கிறோம்? நாம் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தபோது, கரோனா என்ற கொடுமையான பாதிப்பு உச்சத்தில் இருந்தது! நல்லது எதற்குமே ஒத்துழைக்காத, தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும் எதிராக மட்டுமே சிந்தித்து செயல்படும் பா.ஜ.க. அரசு தொடர்ந்து மத்திய அரசில் இருக்கிறது. ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, தமிழ்நாட்டு உரிமைகளை எல்லாம், ஆமாம் சாமி போட்டு அடகு வைத்த அ.தி.மு.க. இப்போது எதிர்க்கட்சியான பிறகு, உண்மைக்கு புறம்பான போலி செய்திகளை எல்லாம் உருவாக்கி, அவதூறு பரப்பிகொண்டு இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டிற்கும், மத்திய அரசிற்கும் பாலமாக இருக்க வேண்டிய ஆளுநர் என்ற பொறுப்பில் இருப்பவர், என்ன செய்கிறார் என்றால் உங்களுக்கே தெரியும்! உங்களின் எண்ணங்களை பிரதிபலித்து, சட்டமன்றத்தில் நிறைவேற்றும் சட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதே தன்னுடைய முதல் வேலை என்று ஆளுநர் செயல்படுகிறார்.

இத்தனையும் மீறி, மக்களான நீங்கள் எங்கள் கூடவே இருப்பதால்தான், 2021-இல் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம். இந்த சாதனையை செய்தது, திராவிட மாடல்! மத்திய அரசே நிதி தர மறுத்து புறக்கணித்தாலும், அவர்கள் வெளியிடும் புள்ளிவிவரங்களில் எல்லாம் தவிர்க்கவே முடியாத அளவிற்கு முதலிடத்தில் இருக்கும் சாதனையை செய்தது, நம்முடைய திராவிட மாடல் அரசு!

இப்படி உங்கள் தேவைகளை உணர்ந்து, நல்ல பல திட்டங்களை செய்துகொண்டிருக்கும் உங்கள் திராவிட மாடல் அரசிடம், உங்களுடைய கனவுகளை நீங்களே சொல்ல வேண்டும் என்று உருவாக்கியிருப்பதுதான், இந்த ‘உங்க கனவ சொல்லுங்க’திட்டம்!

இன்றிலிருந்து முப்பது நாள்களுக்கு, நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் - இன்றிலிருந்து முப்பது நாள்களுக்கு, தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து குடும்பங்களையும், அரசின் சார்பாக தன்னார்வலர்களை நியமிக்கப்படுகின்ற எங்கள் Team-ஐ சேர்ந்தவர்கள் உங்களை சந்திப்பார்கள். அவர்களிடம் உங்களின் கனவுகளை சொல்லுங்கள். அதையெல்லாம் அவர்கள் டிஜிட்டல் முறையில் பதிவு செய்துகொள்வார்கள்! அது எல்லாவற்றையும் ஆய்வு செய்து, தமிழ்நாட்டிற்கான ஒரு மாபெரும் கனவுத் திட்டத்தை அறிவிக்கப் போகிறேன்! 2030-ஆம் ஆண்டிற்கான தொலைநோக்குப் பார்வை கொண்டதாக, அந்த கனவுத்திட்டம் இருக்கும்! நான் உறுதியாக சொல்கிறேன். இந்த கனவுகளை எல்லாம் நான் நிறைவேற்றி காட்டும்போது,

கிராமப்புற உள்கட்டமைப்புகள்

நகர்ப்புற உள்கட்டமைப்புகள்

மொழி மற்றும் பண்பாட்டு வெற்றிகள்

கல்வி மற்றும் திறன் மேம்பாடுகள்

சமூகங்களின் வளர்ச்சி

விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில்

வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்சாலைகள் ஆகிய ஏழு துறைகளில், தன்னிறைவு பெற்ற தமிழ்நாடாக நம்முடைய மாநிலம் வளர்ந்திருக்கும்!

பேரறிஞர் அண்ணா சொல்வார். “மக்களிடம் செல்; அவர்களோடு வாழ்; அவர்களை நேசி; அவர்களிடமிருந்து கற்றுக்கொள்; அவர்களுக்குத் தெரிந்ததிலிருந்து தொடங்கு; அவர்களிடம் இருப்பதிலிருந்து கட்டுமானம் செய்! பணி முடிந்த பிறகு அவர்களுக்கு திருப்தியை ஏற்படுத்திவிட்டுத் திரும்பி வா" என்று சொன்னார்.

அண்ணா சொன்னதை எல்லாம், என்னுடைய இதயத்தில் வைத்து, செயல்படக் கூடியவன் தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்! அதனால்தான், ஒரு கட்சியின் ஆட்சியாக இல்லாமல், ஒரு இனத்தின் ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம்!” என்றார்

Summary

Chief Minister Stalin's speech at the launch of the "Tell Me Your Dream" project.

முதல்வர் ஸ்டாலின்
உங்க கனவ சொல்லுங்க திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com