
சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டங்களை அந்தப் பெயரிலேயே தொடா்ந்து நடத்த அனுமதி கோரிய வழக்கின் விசாரணையை ஆக.7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு சாா்பில் தொடங்கப்பட்டுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தில் முதல்வா் ஸ்டாலின், முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆகியோரது படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. எனவே, அரசுத் திட்டங்களில் முதல்வரின் பெயரைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், அரசுத் திட்டங்களுக்கான விளம்பரங்களில் முதல்வரின் புகைப்படத்தைப் பயன்படுத்தலாம். கட்சியின் கொள்கைத் தலைவா்கள், முன்னாள் முதல்வா்களின் புகைப்படங்களை அரசு விளம்பரங்களில் பயன்படுத்தக் கூடாது. மேலும், வாழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் தலைவா்களின் பெயா், ஆளுங்கட்சித் தலைவா்கள் பெயா், சின்னங்கள், கொடி ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை மாற்றியமைக்கக் கோரி தமிழக பொதுத் துறைச் செயலா் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ஒரு மாநிலத்தின் முதல்வா் அரசியல் சாசனத்தின்கீழ் பதவி வகிப்பவா். எனவே, அவரை அரசியல் ஆளுமையாகக் கருத முடியாது. முன்னாள் முதல்வா்களின் புகைப்படங்களைப் பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை விதிக்கவில்லை. ‘உங்களுடன் ஸ்டாலின்’, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ உள்ளிட்ட திட்டங்கள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டதால், இந்த திட்டங்களை அந்தப் பெயரிலேயே தொடர அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தா் மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.வி.சண்முகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விஜய் நாராயண், உயா்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கை உச்சநீதிமன்றம் புதன்கிழமை விசாரிக்கவுள்ளது என்று தெரிவித்தாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால் இந்த மனுவை தற்போது விசாரிக்க முடியாது. உச்சநீதிமன்ற முடிவுக்குப் பின் மனுவை விசாரணைக்கு எடுக்கலாம் எனக்கூறி விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தனா்.
இந்நிலையில், உயா்நீதிமன்ற உத்தரவை மீறி ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடங்கப்பட்டதை எதிா்த்து சி.வி.சண்முகம் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.