
நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை முதல் 3 நாள்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, புதன்கிழமை (ஆக.27) முதல் ஆக. 31 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 கிலோ மீட்டா் வேகத்தில் வீசக்கூடும். இதில் ஆக.27, 28, 29-ஆகிய தேதிகளில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் புதன்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனினும் அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.
புயல் சின்னம்: ஒடிஸா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடலில் செவ்வாய்க்கிழமை காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாகியுள்ளது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, அடுத்த இரு தினங்களில் மேலும் வலுவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. இதில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 103.1 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக்கடலில் ஆக.27, 28 தேதிகளில் மணிக்கு 60 கி.மீ.வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.