

நமது நிருபர்
கரூரில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணையை ரத்து செய்துவிட்டு, சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழு வசமே விசாரணையை ஒப்படைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
இந்த விவகாரத்தில் தவெக தொடர்ந்த வழக்கில், தமிழக உள்துறைச் செயலர், டிஜிபி மற்றும் கரூர் டவுன் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் சார்பில் பிரமாணப் பத்திரத்தை தமிழக அரசின் கூடுதல் செயலர் எம்.டி. மனுராஜ் தாக்கல் செய்தார்.
அதில் கூறியிருப்பதாவது: கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை 3.10.2025-இல் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு தள்ளுபடி செய்தது. இதே விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றக் கண்காணிப்புடன் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு தனி நீதிபதி உத்தரவிட்டார். மாநில அரசு அதன் சட்டபூர்வ அதிகாரத்துக்கு உட்பட்டு நியமித்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையத்தின் விசாரணையும் சுதந்திரமாக நடைபெற்று வந்தது.
இந்த விவகாரத்தில், உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் செயல்படும் சிறப்புப் புலனாய்வுக் குழு, விசாரணையின் சுதந்திரத்துக்கும், கூட்டாட்சிக் கட்டமைப்புக்கான மரியாதைக்கும் இடையிலான மிகவும் பொருத்தமான சமநிலையை பிரதிநிதித்துவப்படுத்தியது. மேலும், அசாதாரண அதிகார வரம்பைப் பயன்படுத்தி விசாரணையை சிபிஐக்கு மாற்றுவதற்கான நடவடிக்கையை எடுக்க எந்த முகாந்திரமோ, காரணமோ எழவில்லை.
எனவே, சிபிஐ விசாரணையை ரத்து செய்துவிட்டு, சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையை தொடர அனுமதிக்க வேண்டும். நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து வேண்டும் என்று தமிழக அரசின் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கரூர் சம்பவத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான ஆணையம் விசாரிக்க ஆட்சேபம் தெரிவித்தும் உச்சநீதிமன்றத்தில் தவெக மனு தாக்கல் செய்தது. கரூர் சம்பவத்தில் மகனை இழந்த தந்தை, மனைவியை இழந்த கணவர் என வேறு சிலரும் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
அவற்றை விசாரித்த உச்சநீதிமன்றம், உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி கண்காணிப்பின் கீழ் கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.