நெல்லையில் பிரபல கடையின் பெயரில் போலி அல்வா விற்பனை செய்த 6 கடைகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் ஒரு டன் போலி அல்வா பறிமுதல் செய்யப்பட்டது.
உலகப்புகழ் பெற்ற திருநெல்வேலி அல்வா என்ற பெயரில், பொதுமக்களை ஏமாற்றி தரமற்ற மற்றும் கலப்பட அல்வாவை விற்பனை செய்த 6 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறையினர் அதிரடியாக சீல் வைத்தனர். நெய் அல்வா எனக்கூறி வனஸ்பதி மற்றும் எண்ணெய் கலந்து விற்றது சோதனையில் அம்பலமாகியுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் தலைமையில், நெல்லையப்பர் கோயில் மற்றும் ஜங்ஷன் பகுதிகளில் நடைபெற்ற இந்த அதிரடி சோதனையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
நெய் அல்வா என்ற பெயரில் மோசடி
பல கடைகளில் 'சுத்தமான நெய் அல்வா' என்று லேபிள் ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், சோதனையில் அவர்கள் வெறும் நெய்யை மட்டும் பயன்படுத்தாமல், அதனுடன் வனஸ்பதி (டால்டா) மற்றும் கடலை எண்ணெய் அல்லது ரீஃபைண்டு ஆயில் (Refined Oil) ஆகியவற்றைக் கலந்து அல்வா தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வனஸ்பதி மற்றும் எண்ணெய் கலந்த பிறகு அதை 'நெய் அல்வா' என்று விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் என அதிகாரி எச்சரித்துள்ளார்.
6 கடைகளுக்கு சீல்
விதிமுறைகளை மீறியதாக மொத்தம் 6 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. நெல்லையப்பர் கோவில் பகுதியில் ஒரு பெரிய கடை மற்றும் 3 சிறிய கடைகள் என மொத்தம் 4 கடைகள் மூடப்பட்டன.
ஜங்ஷன் பகுதியில் உள்ள ஒரு பெரிய கடை மற்றும் சிறிய கடைகள் மூடப்பட்டன.
பெயர் பலகையில் குளறுபடி
பிரபலமான 'இருட்டுக்கடை அல்வா' கடைக்கு அருகிலேயே, வாடிக்கையாளர்களைக் குழப்பும் வகையில் பெயர் பலகை வைத்திருந்த கடை மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெயர் மூலமாக அது பிரபல கடை என்று மக்களை நம்ப வைக்கும் முயற்சியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.
ஒரு டன் அல்வா பறிமுதல்
இந்தச் சோதனையின் போது சுமார் 500 கிலோ முதல் 1 டன் வரையிலான அல்வா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், விதிமீறல் லேபிள்கள் மட்டுமே சுமார் 25 கிலோ வரை கைப்பற்றப்பட்டுள்ளன.
தவறான வாசகங்களுக்குத் தடை
லேபிள்களில் "100% நேச்சுரல்", "100% வெஜிடேரியன்", "சுத்தமான நெய்" போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இனி கடைகளில் 'அல்வா' என்று மட்டுமே குறிப்பிட வேண்டும் என்றும் கலப்பட எண்ணெய் பயன்படுத்தினால் அதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. தவறுகளை மறைக்க ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது எனவும் முறையான அச்சிடப்பட்ட லேபிள்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்புத் துறையின் இந்த அதிரடி நடவடிக்கை, போலியான அல்வா தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.