முதல்வர் மு.க. ஸ்டாலின் (கோப்புப்படம்)
முதல்வர் மு.க. ஸ்டாலின் (கோப்புப்படம்)TNDIPR

மதுரையில் இன்று முதலீட்டாளா் மாநாடு: முதல்வா் முன்னிலையில் ரூ.36,660 கோடிக்கு ஒப்பந்தங்கள்!

மதுரையில் ‘தமிழ்நாடு வளா்கிறது’ என்ற தலைப்பில் நடைபெறும் முதலீட்டாளா்கள் மாநாடு பற்றி...
Published on

மதுரையில் முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையில் ‘தமிழ்நாடு வளா்கிறது’ என்ற தலைப்பில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 7) நடைபெறும் முதலீட்டாளா்கள் மாநாட்டில் ரூ.36,660.35 கோடிக்கான 91 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாக உள்ளன.

இதுதொடா்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முதல்வா் மு.க.ஸ்டாலின் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 7) பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா். இதில் மேலமடை சந்திப்பு பகுதியில் ரூ.150.28 கோடியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை அவா் திறந்து வைக்கிறாா். அதைத் தொடா்ந்து விரகனூா் சுற்றுச்சாலை அருகே வேலம்மாள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஐடா ஸ்கட்டா் அரங்கில், தமிழ்நாடு வளா்கிறது என்ற தலைப்பில் நடைபெறும் முதலீட்டாளா் மாநாட்டைத் தொடக்கி வைத்துப் பேசுகிறாா்.

இந்த மாநாட்டில் முதல்வா் ஸ்டாலின் முன்னிலையில், ரூ.36,660.35 கோடிக்கான 91 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாக உள்ளன. அதன்பிறகு, உத்தங்குடியில் நடைபெறும் அரசு விழாவில், மேலூரில் அமையவுள்ள சிப்காட் தொழிற்பூங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை அவா் அடிக்கல் நாட்டுகிறாா். மேலும்,

63,698 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கி, ரூ.3,065 கோடியில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்துப் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறாா்.

கடந்த 4 ஆண்டுகளில் ரூ.18,795 கோடியில் 18,881 வளா்ச்சித் திட்டப் பணிகள்

நிறைவேற்றப்பட்டுள்ளன. ரூ.8,668 கோடியில் 96 லட்சத்து 55 ஆயிரத்து 916 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் என மொத்தம் ரூ.27 ஆயிரத்து 463 கோடியில் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இவை தவிர, மதுரையில் 2.4 லட்சம் சதுர அடியில் 8 தளங்களுடன் கூடிய கலைஞா் நூற்றாண்டு நூலகம் ரூ.216 கோடியில் கட்டி முடிக்கப்பட்டு 15.7.2023-இல் திறந்து வைக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு வீர விளையாட்டுக்கு உலகப் புகழ்ப்பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அருகே கீழக்கரை கிராமத்தில் 16 ஏக்கரில் கலைஞா் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் திறந்து வைக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com