

மதுரை மக்கள் வன்முறையை ஏற்க மாட்டார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மதுரையில் வேலு நாச்சியார் மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து, மதுரைக்கு பல்வேறு திட்டங்களையும் முதல்வர் அறிவித்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ``மதுரைக்கு மெட்ரோ ரயில் வேண்டும் என்று நாம் சொன்னால், வேண்டாம் என்று அவர்கள் சொல்கிறார்கள். ஏற்கமுடியாத காரணங்களைக் கூறி, நிராகரிக்கிறார்கள். அதுமட்டுமின்றி, மதுரைக்கு மெட்ரோ தேவையில்லை என்று பாஜக தலைவர்கள் திமிராகவும் பேசுகின்றனர்.
பாஜக ஆளும் மாநிலங்களில் பாட்னா, ஆக்ரா, இந்தூரில் எல்லாம் மெட்ரோவுக்கு எப்படி ஒப்புதல் கிடைத்தது? ஏன் மதுரையில் மெட்ரோ ஓடக் கூடாதா?
சில கட்சிகளுக்கு எப்போதுமே கலவர சிந்தனைதான். தேவையற்ற பிரச்னைகளைக் கிளப்பி, நம்முடைய வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தலாம் என்று நினைக்கின்றனர்.
கார்த்திகைத் திருநாளில், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது இந்து சமய அறநிலையத் துறை சார்பாக முறையாக நடைபெற்றது. இவையெல்லாம், உள்ளூர் மக்களுக்கு, பக்தர்களுக்கு நன்றாகத் தெரியும். அவர்களும் வழிபட்டுவிட்டுச் சென்றனர்.
ஆன்மிகம் என்பது மன அமைதி, நிம்மதியைத் தந்து மக்களை ஒற்றுமைப்படுத்த வேண்டும், 4 பேருக்கு நல்லது செய்வதாய் இருக்க வேண்டும்.
ஒரு சிலரின் அரசியல் லாபங்களுக்காக, பிரிவுகளையும் பிளவுகளையும் உண்டாக்கி, சமூகத்தை துண்டாடச் சதிச் செயல்கள் செய்கின்றனர். அது நிச்சயமாக ஆன்மிகமில்லை; அது அரசியல். அதுவும் மலிவான அரசியல்.
தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, நாங்கள் ஆட்சிக்கு வந்து 1,490 நாள்களில் 3,000-க்கும் மேற்பட்ட கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
அறத்தைக் கொண்டாடும் அமைதியான மாநிலமாகத்தான் தமிழ்நாடு இருந்து வருகிறது. மதுரை மக்களிடம் வளர்ச்சி என்றால், வரவேற்பார்கள். வன்முறை என்று சொன்னால் - விரட்டியடிப்பார்கள்’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: தவெகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் பதில்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.