புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு; பிரச்னைகளை பட்டியலிட்ட விஜய்!

புதுச்சேரியை மத்திய அரசு புறக்கணிப்பதாகக் கூறி, அங்குள்ள பிரச்னைகளை பட்டியலிட்டார் தவெக தலைவர் விஜய்.
தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்
Updated on
3 min read

புதுச்சேரி அரசு, மத்திய அரசின் கூட்டணியில் அங்கம் வகித்தாலும், தமிழகத்தைப் போலவே, புதுச்சேரியையும் மத்திய அரசு புறக்கணித்து வருகிறது என்று தவெக தலைவர் விஜய் கூறினார்.

புதுச்சேரியில் இன்று நடைபெற்ற தவெக பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், தமிழ்நாட்டுக்கு மட்டும்தான் குரல்கொடுப்பேன் என்று நினைக்க வேண்டாம், புதுச்சேரிக்கும் சேர்த்துதான் குரல்கொடுப்பேன். அது என் கடமையும் கூட.

அதனால்தான் இன்று புதுச்சேரி எதிர்கொள்ளும் பிரச்னைகளை பேச வந்திருக்கிறேன். புதுச்சேரியில் ஆளும் கட்சி, மத்தியில் ஆளும் கூட்டணியில் இருந்தாலும் புதுச்சேரியை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

மாநில அந்தஸ்து கோரிக்கையை மட்டுமா கண்டுகொள்ளவில்லை. இங்கு வளர்ச்சியை ஏற்படுத்தும் எந்த திட்டங்களையும் கண்டுகொள்ளவில்லை என்பதைத்தான் கேள்விப்படுகிறோம். மாநில அந்தஸ்து கோரி மத்திய அரசிடம் கோரிக்கை தொடர்ந்து வைக்கப்படுகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் தேதி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. இது மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட 16வது தீர்மானம்.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மூடப்பட்ட ஐந்து மில்கள் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க இதுவரை ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை. வேலை வாய்ப்புக்காக எதையும் செய்யவில்லை. புதுச்சேரியில் ஒரு ஐடி கம்பெனியைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை.

அது பற்றி யார் பேசினாலும் அது அவர்கள் காதில் விழவேயில்லை. இங்க ஒரு அமைச்சரை ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு அவரது பதவியை பறித்து வேறொரு அமைச்சரை நியமித்து 200 நாள்கள் ஆகிவிட்டது.இன்னும் அவருக்கு ஒரு துறையும் ஒதுக்கவில்லை. இந்த செயல் சிறுபான்மையின மக்களை அவமதிப்பதாகும் என்று அந்த மக்களே சொல்கிறார்கள்.

புதுச்சேரியின் ஏனாம் உள்ளிட்ட பகுதிளில் முன்னேற்றமே இல்லை என்று அப்பகுதி மக்களே சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். காவிரி கடைமடைப் பகுதியான காரைக்காலை கைவிட்டதுபோலவே இருக்கிறது.

இவை எல்லாம் மாறவேண்டும். சுற்றுலாத் தலமான புதுச்சேரியில் போதுமான அளவுக்கு வாகன நிறுத்துமிடங்கள் இல்லை. கழிப்பறை வசதிகள் இல்லை. இதையெல்லாம் மேம்படுத்த வேண்டும். புதுச்சேரி கடலூர் மார்க்கமான ரயில் திட்டம் வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை. புதுச்சேரி மக்களுக்கு ஒன்றுதான் சொல்ல வேண்டும். இந்த திமுகவை நம்பாதீங்க.

அவங்களுக்கு உங்கள நம்ப வைத்து ஏமாற்றுவதுதான் வேலை. நான் சொன்ன பல கோரிக்கைகளை நிறைவேற்ற புதுச்சேரி அரசுக்கும், அதன் திட்டங்களுக்கும் உண்மையா துணை நிற்கிறோம். தமிழகத்தை ஒதுக்கியது போல புதுச்சேரியை ஒதுக்க விட மாட்டோம்.

20 லட்சம் பேர் வாழும் புதுச்சேரி மத்திய நிதிக் குழுவில் இடம்பெறவில்லை. அதனால் மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வு அடிப்படையிலும் யூனியன் பிரதேசங்களுக்கான நிதிப் பகிர்தல் அடிப்படையிலும் புதுச்சேரிக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை.

அதனால புதுச்சேரிக்கு ஒவ்வொரு ஆண்டும் தோராயமாகவே மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. அந்த நிதியும் அரசின் செலவுகளுக்கே சென்றுவிடுவதால், மற்ற தேவைகளுக்கு கடன் வாங்குகிறது புதுச்சேரி அரசு.

இந்த நிலைமை மாற வேண்டும் என்றால், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும். இதுதான் இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை. புதுச்சேரிக்கு போதுமான நிதி கிடைக்காததால் வெளியே கடன் வாங்கும் நிலை உள்ளது.

புதுச்சேரிக்கு கடனைக் குறைத்து, தற்சார்பு திட்டங்களை உருவாக்க நிதி அவசியம். அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

மாநில அந்தஸ்து வாங்கினால் போதுமா? தொழில்துறையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். முக்கிய தொழில் பகுதியாக புதுச்சேரியை மாற்ற வேண்டும். இந்திய அளவில் ரேஷன் கடைகளே இல்லாத மாநிலம் புதுச்சேரிதான். ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரமே ரேஷன் கடைகள்தான். மற்ற மாநிலங்களைப் போலவே ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, கோதுமை, எண்ணெய் போன்றவற்றை வழங்க வேண்டும் என்று கூறினார்.

மேலும், காரைக்கால் மீனவர்களை அடிக்கடி கைது செய்யும் இலங்கைக் கடற்படை, அவர்களை விடுவித்தாலும் படகுகள் கிடைக்காமல் மீனவர்களின் வாழ்வாதாரம் மோசமாகி வருகிறது. இந்த நிலை மாற வேண்டும் என்று கூறினார்.

மேலும் பேசிய விஜய், இந்த விஜய், புதுச்சேரி மக்களுக்காக எப்பவும் துணை நிற்பான். வரும் பேரவைத் தேர்தலில் தவெக கொடி பட்டொளி வீசிப் பறக்கும். நம்பிக்கையோடு இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம் என்று கூறி தன்னுடைய பேச்சை நிறைவு செய்தார்.

கரூா் துயர சம்பவத்திற்குப் பிறகு தமிழக வெற்றிக்கழகத் தலைவா் விஜய் இன்று புதுச்சேரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

புதுச்சேரியின் உப்பளம் துறைமுக வளாகத்தில், இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஏராளமான தவெக தொண்டர்கள் பங்கேற்றிருந்தனர்.

போதுமான கூட்டம் இல்லாததால், பாஸ் இல்லாதவர்களுக்கும் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து கூட்டம் அதிகரித்ததால், விஜயை பேசுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து பொதுச் செயலர் ஆனந்த் பேசினார். ஆதவ் அர்ஜுனா பேசிய பிறகு, தவெக தலைவர் விஜய் பிரசார வாகனத்தின் மேல் பகுதிக்கு வந்து பேச்சைத் தொடங்கினார்.

அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு நடிகா் விஜய் வித்தியாசமான முறையில் மக்கள் சந்திப்பு என்ற பெயரில் தமிழக சுற்றுப்பயணம் மேற்கொண்டாா். அவா் தனக்கென உருவாக்கியுள்ள அதி நவீன சொகுசுப் பேருந்தில் பயணம் சென்றாா். அவரது இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் கடும் கூட்டம் கூடியதால் பல இடங்களில் தள்ளுமுள்ளு, தொண்டா்களுக்கு பாதிப்பு போன்ற நிகழ்வுகள் அரங்கேறின. இதன் தொடா்ச்சியாக, கடந்த செப்.27-இல் கரூரில் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பெரும் நெரிசல் ஏற்பட்டு அப்பாவி மக்கள் 41 போ் உயிரிழந்தனா்.

இதனைத் தொடர்ந்து, குறிப்பிட்ட வளாகத்தில் மக்கள் சந்திப்பை நடத்த தவெகவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இன்று புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு உப்பளம் துறைமுகத்தில நடைபெற்று முடிந்துள்ளது.

Summary

TVK leader Vijay listed the problems there, claiming that the central government is neglecting Puducherry.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com