புதுச்சேரி அரசுக்கும், முதல்வருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பாராட்டு தெரிவித்தார்.
புதுச்சேரி உப்பளம் துறைமுக திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார்.
அவர் பேசியதாவது:
”தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரம், கேரளம் என்று வேறு மாநிலங்களாக இருந்தாலும் எல்லாரும் நம் உறவுதான். புதுச்சேரியில் மணக்குள விநாயகர், அரவிந்தர் ஆசிரமம், வில்லியனூர் மாதா, மகாகவி பாரதியார் இருந்த மண், பாவேந்தர் பாரதிசாதன் பிறந்த மண். 1977 முன்பாகவே எம்.ஜி.ஆர். 1974 ஆம் ஆண்டு புதுச்சேரியில் ஆட்சியைப் பிடித்தார். அப்போதே நமக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர். என்று எச்சரிக்கை கொடுத்தது புதுச்சேரிதான். அதனால் தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி புதுச்சேரிக்கும் சேர்த்துதான் குரல் கொடுப்பேன். அது என் கடமையும் கூட.
புதுச்சேரி அரசு தமிழகத்தில் உள்ள திமுக அரசு போன்று இல்லை. வேறு ஓர் அரசியல் கட்சியின் பொதுக்கூட்டம் என்ற நிலையிலும் பாரபட்சம் காட்டாமல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக புதுச்சேரி அரசுக்கும், நம்ம புதுச்சேரி முதல்வருக்கும் மனப்பூர்வமான நன்றி. இதைப் பார்த்தாவது தமிழத்தில் ஆட்சி செய்யும் திமுக கற்றுக் கொள்ள வேண்டும். வரும் தேர்தலில் திமுக 100 சதம் கற்றுக் கொள்ளும். அதை நம் மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.
புதுச்சேரியில் கூட்டணி ஆட்சி இருந்தாலும் மத்திய அரசு புதுச்சேரியைக் கண்டுகொள்ளவில்லை. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்கப்படவில்லை. 27.3.25 அன்று 16-வது முறையாக சட்டப்பேரவையில் மாநில அந்தஸ்து தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் 5 ஆலைகள், பல தொழிற்சாலைகள் மூடிக் கிடக்கின்றன. ஆனால் இதையெல்லாம் திறக்க துரும்புக் கூட கில்லப்படவில்லை. பல்லாயிரக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. ஒரு தகவல் தொழில்நுட்ப தொழிற்சாலைகூட இங்கு இல்லை. ஓர் அமைச்சரை மாற்றிவிட்டு வேறு ஓர் அமைச்சர் நியமிக்கப்பட்டு 200 நாள்கள் ஆகியும் இலாக ஒதுக்கப்படவில்லை. சிறுபான்மை மக்களை அவமானப்படுத்தும் வகையில் இது இருக்கிறது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே, யேனம் ஆகிய பிராந்தியங்களில் எந்த வளர்ச்சியும் இல்லை.
காவிரியின் கடைமடைப் பகுதியான காரைக்காலில் முன்னேற்றம் இல்லை. சுற்றுலா நகரமான புதுச்சேரியில் போதுமான வாகனங்கள் நிறுத்தும் இடம், கழிப்பறை வசதியில்லை. கடலோரமான ரயில் திட்டம் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கிறது. 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை மத்திய நிதிக் குழுவில் சேர்க்கவில்லை. இதனால் போதிய நிதிப் பகிர்வு இல்லை.
ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு அளிக்கும் நிதி அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியதிம் உள்ளிட்ட திட்டச் செலவுகளுக்கே சரியாகவிடுகிறது. அதனால்தான் புதுச்சேரி அரசு வெளிச்சந்தையிலும், கடன் பத்திரங்கள் வாயிலாகவும் நிதியைத் திரட்டுகிறது. இதற்குதான் மாநில அந்தஸ்து கேட்கப்படுகிறது. மேலும், புதுச்சேரிக்குப் பொருளாதார தற்சார்புத் திட்டம் வகுக்கப்பட வேண்டும். தென்னிந்தியாவின் தொழில்கேந்திரமாக புதுச்சேரியை மாற்ற திட்டம் தீட்டப்பட வேண்டும். மேலும், இந்தியாவில் சரியான ரேஷன் கடை இல்லாத மாநிலமாக புதுச்சேரி இருக்கிறது. காரைக்கால் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லும்போது இலங்கை கடற்படை கைது செய்கிறது. இந்த நிலைமைகள் எல்லாம் மாறுவதற்கு புதுச்சேரி மக்களுக்கு எப்போதும் துணையாக இருப்பேன். வரும் தேர்தலில் புதுச்சேரியில் தவெக பட்டொளி வீசி பறக்கும்” என்றார்.
முன்னதாக தவெக பொதுச்செயலர் புஸ்ஸி என். ஆனந்து, தேர்தல் மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜீனா ஆகியோர் பேசினர்.
இருக்கை இல்லை
க்யூ ஆர் கோடு மூலம் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்தனர். யாருக்கும் இருக்கைகள் இல்லை. விஜய் பிரசார வாகனத்தில் நின்றபடியே சுமார் 12 நிமிடம் பேசினார். தொண்டர்களும் நின்றபடியே அதைக் கேட்டனர். பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்கு காலை முதலே தொண்டர்கள் திரண்டனர். போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. மேலும், தவெக தன்னார்வலர்களும், அக் கட்சியின் பாதுகாப்பு வீரர்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு போலீஸôருக்கு துணையாக இருந்தனர். மேலும், புதுச்சேரியில் எந்த அசம்பாவித சம்பவங்களும் நேரிடவில்லை. கூட்டம் முடிந்து தொண்டர்கள் வெளியேறும்போது இரும்புத் தடுப்புகள் விழும் நிலையில் இருந்தது. அதைத் தொண்டர்கள் தாங்கிப் பிடித்தனர். மேலும், காற்றில் பல பதாகைகளும், கொடி மரங்களும் சாய்ந்தன.
துப்பாக்கியுடன் வந்தவர்
கட்சியின் சிவகங்கை கிழக்கு மாவட்டச் செயலர் டாக்டர் பிரபுவின் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் டேவிட்டை போலீஸôர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அரசு அனுமதியுடன் பிரபுவுக்கு 2 பேர் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதில் ஒருவர் டேவிட். இருப்பினும் தொண்டர்கள் வரும் வழியில் ஏன் இவர் துப்பாக்கியுடன் தனியாக வந்தார் என்ற கோணத்தில் போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லேசான தடியடி
மைதானத்துக்குள் தொண்டர்கள் உள்ளே செல்லும்போது கடும் நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸôர் தடியைச் சுழற்றி தரையில் அடித்தும், சிலரை லேசாக அடித்தும் கலைந்து போகச் செய்தனர்.
எம்.ஜி.ஆர். பெயர் உச்சரிப்பு, ரங்கசாமி மீது விமர்சனம் இல்லை
கூட்டத்தில் பேசிய விஜய் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பெயரை உச்சரித்தார். புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ்}பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. மத்திய அரசை விமர்சித்த விஜய், என்.ஆர். காங்கிரஸ் தலைவரும் புதுச்சேரி முதல்வருமான என்.ரங்கசாமியை விமர்சிக்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.