

திருப்பரங்குன்றம் விவகாரத்தை வைத்து நாட்டிலுள்ள பிரச்னைகளை அரசு மூடி மறைப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், "கடன் சுமை ரூ. 10 லட்சம் கோடியைத் தொடவுள்ளது. ஒரு கோடி பேருக்கு கொடுத்த நிலையில், கூடுதலாக 36 லட்சம் பேருக்கு கொடுக்கவிருப்பதாகக் கூறுகின்றனர். விடுபட்டவர்களுக்கு கொடுப்பது என்பது, 2 மாதங்களில் தேர்தல் இருக்கும்நிலையில்தான் நினைவு வருகிறதா?
வாக்கைக் குறிவைத்துத்தான் எல்லாவற்றையும் நகர்த்துகிறார்கள். இதனால்தான், இவர்களை செய்தி அரசியல், விளம்பர அரசியல் என்கிறோம்.
பிப்ரவரியில் மடிக்கணினி கொடுக்கிறார்கள்; ஏனெனில், மார்ச்சில் தேர்தல்.
ரூ. 10 லட்சம் கோடியில் நிறைவேற்றப்பட்ட ஏதேனும் ஒரு நலத்திட்டத்தை அரசு சொல்ல வேண்டும். நல்ல கல்வி, போக்குவரத்து, மின்சாரம், குடிநீர், உலகத்தர மருத்துவம் என ஏதேனும் ஒன்று சொல்ல முடியுமா?
போக்குவரத்துத் துறையில் ரூ. 1 லட்சம் கோடிக்கும் மேல் கடன், மின்சாரத் துறையில் ரூ. 1.5 லட்சம் கோடிக்கும் மேல் கடன். இவ்வளவு கடன் இருந்தும் மின் கட்டணம் உயர்கிறது, சொத்து வரி உயர்கிறது.
இங்கு இலவச மின்சாரம்; அங்கு மின் கட்டணம் உயர்வு, இங்கு இலவச பஸ் - பாஸ்; அங்கு பேருந்து கட்டணம் உயர்வு.’
தேர்தலுக்கு வருவதற்கு முன்னால், ஏன் எங்கள் மீது அக்கறை வருவதில்லை?
சாதி, மதம், கடவுளைப் பற்றி சிந்திப்பவர்களுக்கு மக்களைப் பற்றிய கவலை இருக்காது. நாடு, மக்கள், வளர்ச்சியைச் சிந்திப்பவர்களுக்கு சாதி, மதம், கடவுளைப் பற்றி சிந்திக்க நேரமிருக்காது, தேவையுமிருக்காது.
முருகன் மேல் என்ன திடீர் பக்தி? கடந்த வருடம் திருப்பரங்குன்றத்தில் தீபமேற்றும்போது என்ன செய்தீர்கள்? 2 மாதங்களில் தேர்தல் வருவதால்தான்.
முருகனும் சிவனும் இந்துக் கடவுளா? சைவக் கடவுளா? தேர்தல் வரும்போது, ஏன் திடீரென முருகன் மேல் பாசம் வருகிறது?
கோயிலுக்குள் நடக்கும் ஊழலைக் கண்டுபிடித்துச் சொல்லுங்கள். அறநிலையத் துறை நேர்மையாக இருக்கிறதா? கோயில் இடங்களை வாடகைக்கு விடுவதில் ரூ. 10,000-லிருந்து ரூ. 1 லட்சமாக அமைச்சர் சேகர்பாபு உயர்த்தியுள்ளார்.
அருகிலிருக்கும் மலையை வெட்டி, கல்குவாரியாக ஏற்றுகின்றனர். இந்த மலையில் மட்டும்தான் முருகன் இருக்கிறாரா?
மீனவர்களின் உரிமைகளுக்காஅ போராட்டம் நடத்தினீர்களா? காவிரி பிரச்னையில் போராடினீர்களா? பிரச்னையை உண்டாக்கி, அதன் மூலம் அரசியலை அறுவடை செய்கிறார்கள்.
ஏன் இந்தப் பிரச்னை வருகிறது? இஸ்லாமியர்களெல்லாம் தங்களுக்கு ஆதரவு திமுக என வருவர்; இந்துக்களெல்லாம் தனக்கு பாதுகாப்பு பாஜக என வருவர். இது நல்ல அரசியலா? மதத்துக்காக மனிதனா? மனிதனுக்காக மதமா?
நாட்டிலுள்ள பிரச்னைகளை இதனை வைத்தே மூடி மறைக்கின்றனர்" என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: அடுத்து என்ன செய்யப்போகிறேன்? டிச.24ல் அறிவிப்பு: ஓபிஎஸ்!! பாஜக பேச்சு எடுபடவில்லையா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.