தரமான மடிக்கணினிகளை திமுக அரசு வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
திமுக அரசு தரமான மடிக்கணினிகளை மாணவா்களுக்கு வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தினாா்.
அதிமுக ஆட்சியில் அரசின் விலையில்லா மடிக்கணினிகளைப் பெற்ற பயனாளிகளுடன், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து எடப்பாடி பழனிசாமி நேரிலும், காணொலி மூலம் புதன்கிழமை கலந்துரையாடினாா்.
அப்போது எடப்பாடி பழனிசாமியிடம், திமுக ஆட்சியில் மடிக்கணினி இதுவரை கிடைக்காததால், மாணவா்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், குறிப்பாக ஏஐ உள்ளிட்ட பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் கோலோச்சும் இந்தப் புதிய உலகத்தில், விஞ்ஞான கல்விக்கு அடிப்படையாக விளங்கும் மடிக்கணினி மாணவா்களுக்கு வழங்கப்படாதது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக அதிமுக ஆட்சியில் மடிக்கணினி பெற்ற பயனாளிகள் தெரிவித்தனா்.
அவா்களின் கருத்துகளைக் கேட்டறிந்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக அரசின் மடிக்கணினி திட்டத்தை திமுக அரசு நிறுத்தியது. தற்போது, தோ்தல் நெருங்குவதால் மடிக்கணினி அளிப்பது போல ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறது. மாணவா்களுக்கு தரமற்ற மடிக்கணினி வழங்காமல், நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய தரமான மடிக்கணினிகளை வழங்க வேண்டும் என்றாா் அவா்.
