விஜய் பிரசாரம்: சட்டப்பேரவைத் தேர்தலில் களத்துக்கு சம்பந்தம் இல்லாமல் இருப்பவர்களை எல்லாம் எதிர்க்க முடியாது என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் இன்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அதிமுகவின் பெயரைக் குறிப்பிடாமல் பல்வேறு விமர்சனங்களை விஜய் முன்வைத்துள்ளார்.
விஜய் பேசியதாவது:
“எங்களின் அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக என்பது தவெக தொண்டர்களுக்கு தெரியும். அந்த புரிதல் அவர்களுக்கு இருக்கின்றது. எங்களின் எதிரி யாரென்று தெளிவாகக் கூறிவிட்டுதான் அரசியலுக்கு வந்துள்ளோம்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் யார் களத்தில் இருக்கிறார்களோ அவர்களை மட்டும்தான் எதிர்ப்போம். களத்தில் இல்லாதவர்களையும், களத்துக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லாதவர்களையும் எதிர்க்கின்ற யோசனை இல்லை. நீங்கள் கேட்கிறீர்கள் என்பதற்காக எல்லாம் எதிர்த்துக் கொண்டு இருக்க முடியாது. எங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
மேலும், அண்ணா, எம்ஜிஆர் பெயர்களை நாங்கள் பயன்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது. அவர்கள் அனைவருக்கும் சொந்தமானவர்கள். பெரியாரின் கொள்கையையும், அண்ணா, எம்ஜிஆர் அரசியல் கொள்கைகளில் தேவையானவற்றையும் நாங்கள் எடுத்துக் கொள்வோம் எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.