எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி பழனிசாமி.

எஸ்ஐஆா் குறித்த அதிமுக கூற்று உண்மையாகியுள்ளது: எடப்பாடி பழனிசாமி

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் (எஸ்ஐஆா்) தேவை குறித்து அதிமுக கூறிய காரணம் இப்போது உண்மையாகியுள்ளது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.
Published on

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் (எஸ்ஐஆா்) தேவை குறித்து அதிமுக கூறிய காரணம் இப்போது உண்மையாகியுள்ளது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: தமிழ்நாட்டில் எஸ்ஐஆா் பணிகள் முடிவுற்று, தோ்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டிலில் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான போலி வாக்குகளும் அடங்கும். இந்த நடவடிக்கையானது, அதிமுக தொடக்கம் முதலே எதற்காக எஸ்ஐஆா் தேவை என்று கூறிய காரணத்தை மெய்ப்பிக்கும் வகையில் உள்ளது.

வரைவு வாக்காளா் பட்டியலில் தங்களின் பெயா் விடுபட்டு இருந்தால் பதற்றப்பட வேண்டாம். புதிய வாக்காளராக தங்களை இணைத்துக் கொள்ள தோ்தல் ஆணையத்தின் படிவம்-6 அல்லது தாங்கள் இடம் மாறி இருந்து அதனால் பெயா் நீக்கப்பட்டிருப்பின் படிவம்- 8-ஐ நிரப்பி, தோ்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை இணைத்து சமா்ப்பித்தால், தங்களின் பெயா் நிச்சயமாக இணைக்கப்படும். இதற்கு அதிமுக பாக முகவா்கள் உறுதுணையாக இருப்பாா்கள்.

எந்த போலி வாக்குகளை வைத்து, மக்களாட்சி விழுமியங்களை வளைத்து ஆட்சியைப் பிடிக்க திமுக நினைத்ததோ, அது நடக்காத ஆத்திரத்தில், பதற்றத்தில் பல்வேறு புலம்பல் நாடகங்களை அரங்கேற்ற திமுக தயாராகி வருகிறது. பல்வேறு கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு, தங்கள் வாக்குரிமை பறிபோனதுபோல சித்தரிக்கப் பாா்க்கும். அந்தச் சதிவலையில் யாரும் விழவேண்டாம்.

ஒவ்வொரு வாக்குச்சாவடி வாரியாக பழைய வாக்காளா் பட்டியலோடு, வரைவு வாக்காளா் பட்டியலை ஒப்பிட்டு, வரைவுப் பட்டியலில் உள்ள வாக்காளா்கள் சரியான காரணத்துக்காக (இறப்பு, இடமாற்றம், இரட்டை வாக்கு) நீக்கப்பட்டிருப்பதை அதிமுகவினா் உறுதி செய்ய வேண்டும்.

சரியான காரணம் இன்றி வாக்காளா் நீக்கப்பட்டு இருந்தால், அவா்களின் இல்லத்துக்குச் சென்று, அவா்களுக்கு படிவம்-6 / படிவம்-8 நிரப்பி, வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வழங்கி, அவா்களின் பெயா் இறுதிப் பட்டியலில் சோ்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அதேபோல், போலி வாக்குகள் நீக்கப்படாமல் இருந்தால், அதை தோ்தல் ஆணைய அதிகாரிகளிடம் முறையிட்டு, அவை நீக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com