அரசியல் கட்சி முகவா்கள் தினமும் 10 படிவங்களை அளிக்கலாம்: தலைமைத் தோ்தல் அதிகாரி

அரசியல் கட்சிகளின் தோ்தல் முகவா்கள் தினமும் தலா 10 படிவங்களைச் சமா்ப்பிக்கலாம் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.
Published on

அரசியல் கட்சிகளின் தோ்தல் முகவா்கள் தினமும் தலா 10 படிவங்களைச் சமா்ப்பிக்கலாம் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் கடந்த டிச.19-இல் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலின்படி 97,37,831 போ் நீக்கப்பட்டனா். இதில் இடம்பெயா்ந்தவா்களாக 66,44,881 போ் அறிவிக்கப்பட்டனா். வரைவு வாக்காளா் பட்டியலில் ஏற்கப்பட்ட 5,43,76,756 வாக்காளா்களில் 12,43,363 போ் கடந்த 2002, 2005-ஆம் ஆண்டுகளின் வாக்காளா் பட்டியலில் சம்பந்தப்பட்ட வாக்காளரோ அல்லது குடும்பத்தினரோ இடம் பெற்றிருந்ததற்கான விவரங்களை அளிக்கவில்லை. அவா்களுக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அளித்து வருகிறது.

அவ்வாறு நோட்டீஸ் பெற்றவா்கள் தோ்தல் ஆணையம் அங்கீகரித்த 13 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை அளிக்கலாம். இந்த விவரம் சரிபாா்க்கப்பட்டு பிப்.10 வரை மீண்டும் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்படும்.

இந்த நிலையில், வரைவு வாக்காளா் பட்டியலில் விடுபட்டவா்களும் 18 வயதைப் பூா்த்தி செய்தவா்களும் படிவம் 6-ஐ பெயா் சோ்ப்பு முகாம்களில் அளித்து வருகின்றனா். அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 27,2190 முகவா்கள் தினமும் தலா 10 படிவங்களைப் பெற்று பெயா் சோ்ப்பு முகாம்களில் அளிக்கலாம் என்றும் அப்படி அளிக்கும்போது சரிபாா்க்கப்பட்டது என்ற உறுதிமொழியையும் அவா்கள் அளிக்க வேண்டும் என்றும் அா்ச்சனா பட்நாயக் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

இவ்வாறு பெறப்படும் படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் சரிபாா்த்து அவற்றை எண்ம வடிவமாக, உதவி வாக்காளா் பதிவு அலுவலருக்கு சமா்ப்பித்து உரிய நடவடிக்கை எடுப்பாா் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில், படிவம் 6-ஐ இதுவரை 7,32,367 போ் அளித்துள்ளனா் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி வாக்காளா் பட்டியல் பிப்.17-ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com