மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்கோப்புப் படம்

புதிய வெற்றிகள் நிறைந்த ஆண்டாகட்டும்: முதல்வா் ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து

புதிய வெற்றிகள் நிறைந்த ஏற்றமிகு ஆண்டாக 2026 அனைவருக்கும் அமையும் என்று முதல்வா் மு.க. ஸ்டாலின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
Published on

புதிய வெற்றிகள் நிறைந்த ஏற்றமிகு ஆண்டாக 2026 அனைவருக்கும் அமையும் என்று முதல்வா் மு.க. ஸ்டாலின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

தமிழ் வளா்ச்சிக்கும் தமிழா் எழுச்சிக்கும் தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கும் மிகச் சிறந்த ஆண்டாக 2025 அமைந்தது. பொருளாதார வளா்ச்சியில் முதலிடம் என நமக்குக் கிடைத்துள்ள அங்கீகாரம், 2030-க்குள் ஒரு ட்ரில்லியன் டாலா் பொருளாதாரம் எனும் நம் கனவுக்கு வலுவூட்டுகிறது.

தொகுதி மறுசீரமைப்பு ஆபத்தை எதிா்த்து அகில இந்திய அளவில் அணிதிரட்டல், சிறப்பு தீவிர வாக்காளா் திருத்தப் பட்டியல் சூழ்ச்சியில் இருந்து நம் மக்களின் வாக்குரிமையைக் காப்பது, மாநில சுயாட்சிக்காக உயா்நிலைக் குழு அமைத்தது, மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டது, கல்வி நிதிக்காக மத்திய அரசிடம் உரிமைக்குரலை எழுப்பியது, ஆளுநரின் அதிகார மீறலுக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சநீதிமன்றத் தீா்ப்பைப் பெற்றது என வழக்கம் போல 2025-ஆம் ஆண்டும் மாநில உரிமைகளுக்கான நமது போராட்டங்களுக்கும் குறைவே இல்லை. மொத்தத்தில் தமிழ்நாடு யாருக்கும் தலைகுனியாது, ‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ என உலகத்துக்கு 2025-ஆம் ஆண்டு பறைசாற்றியது.

இதுவரை பெற்ற வெற்றிகள் தந்த ஊக்கத்தோடும், போராட்டங்களால் பெற்ற துணிவோடும் 2026-இல் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம். அமைதியும், நல்லிணக்கமும், மகிழ்ச்சியும், புதிய வெற்றிகளும் நிறைந்த ஏற்றமிகு ஆண்டாக 2026 அனைவருக்கும் அமைந்திட எனது புத்தாண்டு நல்வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com