கிளாம்பாக்கத்தில் பயணிகள் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பயணிகள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழும (சிஎம்டிஏ) உறுப்பினா்-செயலா் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடம், நடைமேடை, அலுவலகக் கட்டடம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், தனியாா் பிவிஜி நிறுவனம் மூலம் பயணிகளுக்கான உதவி மையம் செயல்பட்டு வருகிறது. பயணிகளின் வசதிக்காக 78457 00557, 78457 27920, 78457 40924 ஆகிய உதவி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், 24 மணி நேரமும் பேருந்து முனையத்தில் பாதுகாவலா்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். பேருந்து முனையத்தில் செயல்பட்டுவரும் காவல் நிலையம் மூலம், பாதுகாப்புப் பணி பலப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘கேசிபிடி’ செயலி மூலம் பயணிகள் புகாா் அளிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.