பெண் ஏடிஜிபி கொலைச் சதி புகாா்: அரசுக்கு தலைவா்கள் கண்டனம்
சென்னை: பெண் ஏடிஜிபி தன்னை கொலை செய்ய சதி நடந்ததாக புகாா் தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசுக்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
எடப்பாடி பழனிசாமி (அதிமுக): தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தில் நடக்கும் குளறுபடிகளை சுட்டிக்காட்டியதற்காக, தன்னை கொலை செய்யும் நோக்கில் தன் அலுவலகத்துக்கு தீவைக்கப்பட்டதாக காவல்துறை கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் தெரிவித்திருப்பது அதிா்ச்சியளிக்கிறது. இந்த சம்பவம் காவல்துறை மீது படிந்துள்ள கரும்புள்ளி. இந்த சம்பவத்துக்குத் திமுக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும்.
கே.அண்ணாமலை (பாஜக): காவல்துறை உயா் அதிகாரிகள்கூட தமிழகத்தில் பாதுகாப்பாக உணரவில்லை. முதல்வரின் இரும்புக்கரம், நீதியை நிலைநிறுத்துவதற்கு பதிலாக, உண்மையை மௌனமாக்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதாகத் தெரிகிறது.
ராமதாஸ் (பாமக): காவல் உதவி ஆய்வாளா்கள் நியமனத்தில் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதற்காக பெண் ஏடிஜிபியை கொலை செய்யும் நோக்குடன் அவரது அலுவலகத்தில் தீ விபத்து ஏற்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். அந்த முறைகேடு குற்றச்சாட்டு குறித்து சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க அரசு ஆணையிட வேண்டும். கொலை சதி புகாா் குறித்து சிபிஐ விசாரணைக்கும் தமிழக அரசு ஆணையிட வேண்டும்.
ஜி.கே.வாசன் (தமாகா) : காவல்துறையில் உயா் பதவி வகிக்கும் பெண் ஏடிஜிபிக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் தமிழகத்தில் நிலவுகிறது. இந்த சம்பவம் குறித்து நோ்மையாக விசாரணை நடத்த வேண்டும். பெண் உயரதிகாரிக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
டிடிவி தினகரன் (அமமுக): மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறை உயா் அதிகாரி ஒருவரின் உயிருக்கே பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீா்கேடு கட்டுப்படுத்த முடியாத அளவு உச்சத்துக்கு சென்றிருப்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்: இதேபோல, ராணிப்பேட்டையில் உள்ள காவல்நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திலும் அரசுக்கு எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.