
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.இதனால் அந்த மாணவி கர்ப்பமாகி கருக்கலைப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் மு. க. ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அண்மையில் சென்னை கிண்டியிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியொருவர் வெளிநபரால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, சென்னை கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இளம்பெண்ணை ஒருவர் ஆட்டோவில் கடத்த முயற்சித்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அரசுப்பள்ளி மாணவியை ஆசிரியர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகியிருக்கும் தகவல் ஒட்டுமொத்த தமிழகத்திலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ‘கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 13 வயது சிறுமி, அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மூவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
"அரசுப்பள்ளி மற்றும் கல்லூரிகளிலேயே பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை" என்று பெண் பாதுகாப்பு மீதான பொறுப்புடன் நான் சுட்டிக்காட்டிய போது, "எடப்பாடி பழனிசாமி பீதியைக் கிளப்புகிறார்" என்று சொன்ன அமைச்சர்கள், இப்போது என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
அரசுப்பள்ளி மாணவிக்கு, தான் படிக்கும் பள்ளிகளிலேயே பாதுகாப்பு இல்லை என்பது வேலியே பயிரை மேய்கின்ற செயல், திமுக அரசே இக்கொடுரமானச் செயலுக்கு முழு பொறுப்பேற்க வேண்டும்.
பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை என்ற நிலைக்கு தமிழ்நாட்டைத் தள்ளியதற்கு திமுக அரசு தலைகுனிய வேண்டும். பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு பொறுப்பேற்று, பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய தனக்கு திராணியில்லை என்று பகிரங்கமாக அறிவித்து முதல்வர் மு. க. ஸ்டாலின் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
போச்சம்பள்ளி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூவர் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுத்து, உச்சபட்ச தண்டனை கிடைக்கப் பெறுவதை உறுதிசெய்ய வேண்டுமென திமுக அரசை வலியுறுத்துகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.
பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த கொடுங்குற்றச்செயலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், அதே பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் சின்னசாமி, ஆறுமுகம், பிரகாஷ் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 3 ஆசிரியர்களையும் இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.