வேலூர் அருகே ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை: கர்ப்பிணி எப்படியிருக்கிறார்?

வேலூர் அருகே ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கர்ப்பிணிக்கு சிகிச்சை
கர்ப்பிணிக்கு சிகிச்சை
Published on
Updated on
1 min read

வேலூர் அருகே ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி, ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அவரது உயிருக்கு ஆபத்தில்லை என்ற நிலையில், அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

முதல்கட்டமாக, அவரது கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் அவருக்கு அறுவைசிகிச்சைகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, ஸ்கேன் செய்யப்பட்டிருக்கிறது. அதன் முடிவுகள் வந்ததும் அடுத்தக்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர் கர்ப்பிணி என்பதால், அதற்கேற்ற வகையில் சிகிச்சைகள் மிகவும் கவனத்துடன் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.

ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த நான்கு மாத கர்ப்பிணி, திருப்பூரில் பனியன் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்தார். இவர் வியாழக்கிழமை தனது சொந்த ஊரான சித்தூருக்குச் செல்வதற்கு கோயம்புத்தூர்- திருப்பதி இன்டர்சிட்டி விரைவு ரயிலில் பயணம் செய்தபோது, இளைஞர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.

இதனால் கத்திக் கூச்சலிட்ட கர்ப்பிணியின் கையை உடைத்து ஓடும் ரயிலிலிருந்து கே.வி. குப்பம் அருகே கீழே தள்ளியிருக்கிறார். ஓடும் ரயிலிலிருந்து கீழே விழுந்த கர்ப்பிணிக்கு, தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தப் போக்கு அதிகமாக இருந்துள்ளது. உயிருக்குப் போராடியவரை மீட்டு மருத்துவமனைக்கு ரயில்வே காவல்துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

அங்கு சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் குற்றப்பின்னணி கொண்ட ஹேமராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இரண்டு கொலை வழக்குகளில் தொடர்புடைய இவர், ரயிலில் கர்ப்பிணி என்றும் பாராமல், பாலியல் துன்புறுத்தல் செய்து ரயிலிலிருந்து தள்ளியிருக்கிறார்.

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு நடந்த சம்பவம் குறித்து ரயில்வே பாதுகாப்புப் படை விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணை செய்து அறிக்கை அனுப்பும்படி சென்னை ரயில்வே கோட்ட அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com