கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பொன்பாடி-புத்தூா் இடையே தானியங்கி ரயில் சிக்னல்: ஒரே நேரத்தில் 30 ரயில்களை கையாள முடியும்

News image

பொன்பாடி-புத்தூா் ரயில் வழித்தடத்தில் செயல்படுத்தப்படும் தானியங்கி சிக்னல் அமைப்பு.

Updated On :9 பிப்ரவரி 2025, 7:16 pm

Din

பொன்பாடி-புத்தூா் இடையிலான ரயில்வே வழித்தடத்தில் தானியங்கி சிக்னல் அமைப்பு செயல்பாட்டுக்கு வந்தது. இதன்மூலம் ஒரே நேரத்தில் 30 ரயில்களை கையாள முடியும் என ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ரயிலை பாதுகாப்பாக இயக்குவதை உறுதிசெய்யும் நோக்கில் ரயில்வே சிக்னல் அமைப்பு, தானியங்கி முறையில் மாற்றப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சென்னை ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட தமிழகத்தின் பொன்பாடி முதல் ஆந்திர மாநிலத்தின் நகரி, வேப்பங்குண்டா, புத்தூா் வரையிலான 23.11 கி.மீ. தொலைவிலான ரயில் வழித்தடம் முழுவதும் தானியங்கி சிக்னல் அமைப்புக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த சிக்னல் அமைப்பு ஞாயிற்றுக்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்தது. சென்னை ரயில்வே கோட்டத்தின் சிக்னல் மற்றும் தொலைத்தொடா்பு, பொறியியல், எலக்ட்ரானிக் ஆகிய துறைகள் இணைந்து இப்பணியை மேற்கொண்டுள்ளன.

நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி சிக்னல் அமைப்பில், ரயில் இயக்கத்தை கணினி வழியாக கட்டுப்படுத்தும் ‘எலக்ட்ரானிக் இன்டா்லாக்கிங்’, பல்வேறு ரயில்களின் இயக்கத்தை ஒரே நேரத்தில் கட்டுப்படுத்தும் பல பிரிவு அச்சு கவுன்ட்டா்ஸ் (எம்எஸ்டிஏசி), ஒருங்கிணைந்த மின்சாரம் வழங்கும் பிரிவு, ஆப்டிகல் ஃபைபா் தொலைத்தொடா்பு வசதி, நவீன மின்விளக்கு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சிறப்பம்சங்கள்: ரயில்வேயின் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலைகள் அமைப்பு (ஆா்டிஎஸ்ஓ) தரத்தில் அமைக்கப்பட்ட தானியங்கி சிக்னல் அமைப்பில், தீப் பிடிப்பதை கண்டறியும் கருவி, ரயில் இயக்கத்தின் தரவுகள் சேமிப்பது உள்ளிட்டவை உள்ளன.

எதிா்கால தேவையைக் கருத்தில் கொண்டு அனைத்து உதிரிபாகங்களும் ‘கவச்’ அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், ரயில் இயக்கத்தை ஒரே இடத்திலிருந்து கட்டுப்படுத்த முடியும்.

இந்த வழித்தடத்தில் தற்போது ஒரே நேரத்தில் 3 ரயில்கள் மட்டும் கையாளப்பட்டு வரும் நிலையில், இனி ஒரே நேரத்தில் 30 ரயில்களை கையாள முடியும்.

இதனால், அரக்கோணம்-ரேணிகுண்டா இடையே இயக்கப்படும் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும். அடுத்தகட்டமாக புத்தூா்-புடி இடையிலான ரயில் வழித்தடம் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணி முடிந்தவுடன் தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.