சென்னை விமான நிலைய 2-வது ஓடுதளத்துக்காக இடிக்கப்படும் உயரமான கட்டடங்கள்!

சென்னை சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது ஓடுதளத்துக்கு இடையூறாக இருக்கும் கட்டங்களை அகற்ற நடவடிக்கை.
சென்னை விமான நிலையம்(கோப்புப்படம்)
சென்னை விமான நிலையம்(கோப்புப்படம்)EPS
Published on
Updated on
1 min read

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் உள்ள இரண்டாவது ஓடுதளத்தை முழுமையாக பயன்படுத்துவதற்கு இடையூறாக இருக்கும் உயரமாக கட்டடங்களை இடிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கொளப்பாக்கம் பகுதியில் அதிகளவிலான தென்னை மரங்கள், தொலைபேசி கோபுரங்கள் மற்றும் உயரமான கட்டடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், மக்களுக்கு குறைந்தபட்ச பாதிப்புகள் இருக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு ஓடுதளங்கள் இருக்கின்றன. பிரதான ஓடுதளம் 3.66 கி.மீ. தொலைவும், இரண்டாவது ஓடுதளம் 2.89 கி.மீ. தொலைவும் கொண்டது.

இந்த நிலையில், இரண்டாவது ஓடுதளத்தை முழுமையாக பயன்படுத்த 509 தடைகளை விமான நிலைய அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

இந்த தடைகளால் இரண்டாவது ஓடுதளத்தில் சிறிய ரக விமானங்கள் மட்டுமே தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.

தென்னை மரங்கள், தொலைபேசி கோபுரங்கள் மற்றும் உயரமான கட்டடங்களை அகற்ற விமான நிலையம் தரப்பில் தொடர்ந்து உள்ளாட்சி நிர்வாகத்திடம் பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, 133 தென்னை மரங்கள் மற்றும் 7 தொலைபேசி கோபுரங்கள் அகற்றப்பட்டன. தொடர் முயற்சியால் 2023ஆம் ஆண்டு தடைகளின் எண்ணிக்கை 180 ஆக குறைக்கப்பட்ட நிலையில், 2024 இல் 53 புதிய தொலைபேசி கோபுரங்கள், புதிய கட்டடங்களால் 278 இடையூறுகளாக மீண்டும் அதிகரித்துள்ளது.

இடையூறுகளை குறைப்பதற்காக குறைந்த உயரத்தில் வளரக்கூடிய தென்னை மர விதைகளை விமான நிலையம் தரப்பில் சுற்றுப்புற மக்களுக்கு வழங்கி வருகின்றனர். மேலும், உயரமான கட்டடங்களை கண்டறிந்து 2 மீட்டர் வரை இடிக்க அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பியுமான டி.ஆர்.பாலு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மாவட்ட ஆட்சியர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது விமான நிலைய அதிகாரிகள் தரப்பில், இரண்டாவது ஓடுதளத்தை முழுமையாக பயன்படுத்தினால், சென்னைக்கு அதிகளவிலான விமானங்களையும் பெரிய ரக விமானங்களையும் இயக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விமான நிலையத்தின் இரண்டாவது தளத்துக்கு இடையூறாக இருக்கும் மரங்கள், கட்டடங்கள் உள்ளிட்டவற்றை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அகற்ற ஆட்சியர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com