வேலூர் மருத்துவர் பாலியல் வன்கொடுமை: சிறுவனுக்கு 20 ஆண்டுகள் சிறை

வேலூர் பெண் மருத்துவர் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியான சிறுவனுக்கு 20 ஆண்டுகள் சிறை
பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
Updated on
1 min read

வேலூர்: வேலூரில் இரவில், ஆண் நண்பருடன் ஆட்டோவில் பயணித்த பெண் மருத்துவர் கடத்திச் செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சிறுவனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வேலூரில் பெண் மருத்துவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஒரு சிறுவன் உள்பட ஐந்து பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.

இதில், நான்கு குற்றவாளிகளுக்கும் தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், சிறுவன் மீதான வழக்கை விசாரித்து வந்த போக்சோ நீதிமன்றம், இன்று தீர்ப்பளித்துள்ளது.

போக்சோ நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் பிறப்பித்த உத்தரவில், சிறுவனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

சம்பவத்தின் பின்னணி

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டில் மார்ச் மாதத்தில் பெண் மருத்துவர் ஒருவர், அவரது நண்பருடன் சேர்ந்து திரையரங்குக்கு சென்றுவிட்டு, மருத்துவமனைக்கு திரும்பிக் கொண்டிருந்த வேளையில், இருவரையும் 5 பேர் சேர்ந்து கடத்தினர். மேலும், கத்தி முனையில் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அவர்களிடமிருந்த 2 பவுன் தங்க நகையையும், ரூ. 40,000 பணத்தையும் பறித்து சென்றனர்.

இருப்பினும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது குறித்து வெளியில் தெரிந்தால் அவமானம் என்று கருதிய பெண் மருத்துவர், இந்தச் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. இருந்தபோதிலும், ஓரிரு நாள்களில் காவல் துறைக்கு மின்னஞ்சல் மூலம் பெண் புகார் அளித்தார்.

இந்த வழக்கில் கைதான 5 பேரில் ஓர் இளஞ்சிறாரைத் தவிர்த்து பார்த்திபன், பரத், மணிகண்டன், சந்தோஷ் ஆகிய நால்வரை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

இந்த வழக்கின் 496 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். தொடர்ந்து, கூடுதல் மகளிர் நீதிமன்றத்திலிருந்து விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனவரி இறுதியில் தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் பார்த்திபன், பரத், மணிகண்டன், சந்தோஷ் ஆகிய நால்வருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 25,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், வழக்கில் கைதான இளஞ்சிறாருக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு, தண்டனை விவரம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com