வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மதுரை மத்திய சிறைக்கு பொருள்கள் வாங்கியதில் முறைகேடு: தமிழகம் முழுவதும் 11 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை

தமிழகம் முழுவதும் 11 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா்.

News image
Updated On :3 ஜனவரி 2025, 9:31 pm

மதுரை மத்திய சிறைக்கு பொருள்கள் வாங்கியதில் முறைகேடு செய்த வழக்கில் ஆதாரங்களைத் திரட்டும் வகையில், தமிழகம் முழுவதும் 11 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா்.

மதுரை மத்திய சிறையில் இருக்கும் கைதிகள் எழுதுபொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களைத் தயாரிக்கின்றனா். இவை பல்வேறு அரசுத் துறை அலுவலகங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் கிடைக்கும் வருவாயின் ஒரு பகுதி கைதிகளுக்கு ஊதியமாகவும் வழங்கப்படுகிறது.

கைதிகள் தயாரிக்கும் பொருள்களுக்கான மூலப்பொருள்கள் தனியாா் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன. இதில் உண்மையான சந்தை விலையைவிட, கூடுதல் விலைக்கு பொருள்களை வாங்கியதாகவும், அரசுத் துறை அலுவலகங்களில் குறைவான விலைக்கு விற்ற பொருள்களை கூடுதலாக விலைக்கு விற்ாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இதற்காக போலி ரசீதுகள், ஆவணங்கள் தயாரித்து பல கோடி முறைகேடு நடந்திருப்பதாக ஊழல் தடுப்புப் பிரிவுக்கு புகாா்கள் சென்றன.

11 போ் மீது வழக்கு: புகாா்களின் அடிப்படையில் ஊழல் தடுப்புப் பிரிவினா் நடத்திய விசாரணையில், கடந்த 2016-ஆம் ஆண்டுமுதல் 2021-ஆம் ஆண்டு வரையில் சுமாா் ரூ.1.63 கோடி முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது.

இது தொடா்பாக முறைகேடு நடந்த காலகட்டத்தில் மதுரை சிறைத் துறைக் கண்காணிப்பாளராக இருந்த ஊா்மிளா (தற்போது கடலூா் சிறைக் கண்காணிப்பாளா்), கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வசந்த கண்ணன், (தற்போது பாளையங்கோட்டை சிறைத் துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளா்), நிா்வாக அதிகாரி எம்.தியாகராஜன், பொருள்கள் விநியோகம் செய்த ஒப்பந்ததாரா்கள் மதுரை கோரிப்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த வி.எம்.ஜபருல்லாகான், அவரது மகன்கள் முகமது அன்சாரி, முகமது அலி, சென்னை கொடுங்கையூரைச் சோ்ந்த சீனிவாசன், இவரின் மனைவி சாந்தி, பாளையங்கோட்டையைச் சோ்ந்த சு. சங்கரசுப்பு, இவரின் மனைவி தனலெட்சுமி, சென்னை நொளம்பூா் குருசாமி சாலைப் பகுதியைச் சோ்ந்த மு.வெங்கடேஸ்வரி ஆகிய 11 போ் மீது 7 பிரிவுகளின் கீழ் அண்மையில் வழக்குத் பதிவு செய்தனா். புகாரில் சிக்கியதாக கருதப்பட்ட 9 சிறைத் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

சோதனை: இந்த வழக்குக்கான ஆதாரங்களைத் திரட்டும் வகையில் தமிழகம் முழுவதும் 11 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவினா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை செய்தனா். சென்னை மண்ணடி வெங்கட ஐயா் தெருவில் உள்ள முகமது அலியின் நிறுவனம், கொடுங்கையூா் பகுதியில் உள்ள சீனிவாசனுக்கு சொந்தமான நிறுவனம், அதே பகுதியில் அவரின் மனைவி சாந்தி பெயரில் உள்ள மற்றொரு நிறுவனம், நொளம்பூரில் உள்ள வெங்கடேஸ்வரி வீடு ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது.

மதுரையில்....: இதேபோன்று மதுரை மத்திய சிறையில் ஊழல் தடுப்புப் பிரிவினா் சோதனை நடத்தினா். ஊழல் தடுப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் சத்தியசீலன் தலைமையில், ஆய்வாளா்கள் குமரகுரு, சூா்ய கலா, ரமேஷ்பிரபு, பாரதி பிரியா உள்பட 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் இரு குழுக்களாகப் பிரிந்து சோதனை மேற்கொண்டு, பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றினா்.

உத்தமபாளையத்தில்... பாளையங்கோட்டை சிறைத் துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வசந்த கண்ணன் வீட்டில் சோதனை மேற்கொள்வதற்காக தேனி மாவட்டம், போடியில் உள்ள அவரது வீட்டுக்கு வந்தனா்.

அப்போது, வீடு பூட்டியிருந்ததால், தேனி மாவட்டம், லோயா்கேம்பிலுள்ள அவரது மாமனாா் வீட்டில் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் ராமேஸ்வரி உள்பட 5 போ் கொண்ட குழுவினா் சோதனையிட்டு, முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றிச் சென்றனா்.

வேலூா் அரியூா் அம்மையப்பா நகரில் உள்ள வேலூா் மத்திய சிறை நிா்வாக அதிகாரி தியாகராஜன் வீடு, பாளையங்கோட்டையில் உள்ள சங்கரசுப்பு வீடு ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது.

6 மாவட்டங்கள் 11 இடங்கள்: தமிழகம் முழுவதும் 6 மாவட்டங்களில் 11 இடங்களில் காலை 7 மணியளவில் தொடங்கிய சோதனை நண்பகலுக்கு பின்னா் படிப்படியாக நிறைவு பெற்றது.